ஆத்தூர்:ஆத்தூர் நகராட்சி வணிக வளாக கடை உள்ளிட்ட இடங்களில், காலாவதியான குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள, ஹோட்டல், டீக்கடை, ஸ்வீட், மிக்ஸர் உற்பத்தி கடை, குடிநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை கடைகளில், நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள, ராஜேந்திரன் என்பவரது, "ஜெயலட்சுமி ஆயில் ஸ்டோர்' கடை மற்றும் நகராட்சி பொருள் பாதுகாப்பு அறை குடோனில் இருந்த காலாவதி குடிநீர் கேன், எண்ணெய், நெய் உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புது பஸ் ஸ்டாண்ட் வழிப்பாதையில் உள்ள, கலியபெருமாள் என்பவரது, "ஸ்ரீமகாலட்சுமி ஸ்வீட் கடை'யில், காலாவதியான, 60 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை எல்.பி.என்.வி., காம்பளக்ஸில் உள்ள, அர்ச்சனா ஹோட்டல், காமாட்சி எசன்ஸ் ஸ்பாட், ராஜகுரு ஸ்வீட் ஆகிய கடைகளில் ஆய்வு செய்தனர்.
இந்த கடைகளில், 40க்கும் மேற்பட்ட குளிர்பானம் , குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். அதையடுத்து, ஜெயலட்சுமி ஆயில் ஸ்டோர் மற்றும் குடிநீர் கேன் குடோன், மகாலட்சுமி ஸ்வீட் கடை, ராஜகுரு ஸ்வீட், அர்ச்சனா ஹோட்டல், காமாட்சி எசன்ஸ் ஸ்பாட் உள்பட ஆறு கடை உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதா, நோட்டீஸ் வழங்கி, எச்சரிக்கை செய்தார்.
* அ.தி.மு.க., "மாஜி' பஞ்சாயத்து தலைவர் வேண்டுகோள்: உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் அனுராதாவிடம், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ராமநாயக்கன்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காசி என்பவர், ""உணவு பொருளில் கலப்படம் சேர்க்கும் நபர்களும், சமூக விரோதிகள் என்பதால், பாரபட்சம் இல்லாமல், நடவடிக்கை எடுங்கள்,'' என, வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment