ஆத்தூர்: ஆத்தூர் அருகே, சேகோ ஃபேக்டரியில், ரசாயன அமிலம் கலந்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்ததால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சேகோ உற்பத்திக்கு தடை செய்து, "நோட்டீஸ்' வழங்கினார்.
ஆத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள, இனிப்பு, காரவகைகள் தயாரிக்கும் தொழிற்கூடம், ஸ்வீட் கடைகளில், நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, டாக்டர் அனுராதா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் புஷ்பராஜ், சுந்தர்ராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர், ஆய்வு செய்தனர். அப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்வீட், மிக்ஸர் உள்ளிட்ட இனிப்பு, கார வகை தயார் செய்யும், 20க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களில், சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயார் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினர்.
தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த, பச்சமுத்து என்பவரது, எஸ்.எஸ்., சேகோ ஃபேக்டரியில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஸ்டார்ச் மாவு, உற்பத்தி செய்து வைத்திருந்த ஜவ்வரிசியில், ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
மேலும், இரண்டு லிட்டர், சல்ப்யூரிக் அமிலத்தை கண்டறிந்து, அவற்றை அழித்தனர். சேகோ உற்பத்தியில், ரசாயனம் கலந்துள்ளது கண்டறியப்பட்டதால், சேகோ உற்பத்திக்கு தடை செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதா, "நோட்டீஸ்' வழங்கினார். ஜவ்வரிசி "மாதிரி' எடுத்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரத்தில் உள்ள, முருகன் சேகோ ஃபேக்டரியில், ஜவ்வரிசி மாதிரி எடுத்துச் சென்றனர். ஜவ்வரிசியில் கலப்படம் இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா எச்சரிக்கை விடுத்தார்
No comments:
Post a Comment