சேலம், அக்.29-வெண்மை நிறத்துக்கு ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டதா? என்பதை கண்டறிய 648 ஜவ்வரிசி மூட்டைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலைகள் அதிகளவு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகள் சிலவற்றில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதாக வந்த புகார்களை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது ஜவ்வரிசியில் கலப்படம் செய்த ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜவ்வரிசி வெண்மையாக மாறுவதற்கு ரசாயன பவுடர் கலப்படம் செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று மாலை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அதிகாரிகள் சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி தெருவில் உள்ள ஷாமதன்ராஜ் என்பவரது குடோனில் ஆய்வு நடத்தினர்.
ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல்
அப்போது அங்கு ஒரு லாரியில் 50 கிலோ எடை கொண்ட 324 ஜவ்வரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு வடமாநிலங்களுக்கு அனுப்ப தயாராக இருந்தன. மேலும் 2 லாரிகளில் ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்ற ஊழியர்கள் தயாராக இருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் ஏற்றப்பட தயாராக இருந்த ஜவ்வரிசி மூட்டைகளில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தனர்.
மேலும் அங்கிருந்த 648 ஜவ்வரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அந்த குடோனிலே மூட்டைகளை பாதுகாப்பாக வைத்தனர்.
அதிக விலைக்கு...
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறும் போது, ‘கலப்படம் செய்யப்படாத ஜவ்வரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும். வெண்மையாக இருக்கும் ஜவ்வரிசி தான் அதிக விலைக்கு விற்பனையாகிறது. இதற்காக வியாபாரிகள் ஏதாவது ஒரு ரசாயன பவுடரை கலப்படம் செய்து ஜவ்வரிசியை வெண்மையாக்குகின்றனர்.
இதுதொடர்பான புகார்கள் அடிக்கடி வந்ததால் இந்த குடோனில் சோதனை செய்தோம். அங்கிருந்த ஜவ்வரிசிகளை மாதிரிக்கு சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வரும் வரை பறிமுதல் செய்யப்பட்ட 648 ஜவ்வரிசி மூட்டைகளை விற்பனை செய்யக்கூடாது என்று கூறி உள்ளோம். பரிசோதனையின் முடிவில் கலப்படம் ஏதேனும் செய்தது தெரியவந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று கூறினார்.
No comments:
Post a Comment