Aug 5, 2014

ஓமலூரில் பரபரப்பு கொசுப்புழுக்களுடன் கூடிய கேன் தண்ணீர் வினியோகம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்


ஓமலூர், ஆக.5:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ஏராளமான மினரல் வாட்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து, ஓமலூர் மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓமலூர் பகுதிகளில் விநியோகிக்கப்படும் கேன்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர் ஓமலூர் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் கடை, கடையாக திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும், மினரல் வாட்டர் கேன்கள் கொண்டு வந்த வாகனங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில கேன்களில் கொசுப்புழு முட்டையிட்டிருந்த நிலையில், வினியோகத்திற்காக கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த வேனில் இருந்த அனைத்து கேன்களையும் அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது, பெரும்பாலான கேன்களில் தயாரிப்பாளர் பெயர் தவறாகவும், சீல் மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமலும் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அனைத்து கேன்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தண்ணீரை கீழே கொட்டி அழித்தனர்.
மேலும், கொசுப்புழு இருந்த தண்ணீர் கேன்களிலிருந்து தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் கேன் குடிநீரை வினியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment