ஓமலூர்: கடைக்கு வழங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில், புழுக்கள் இருப்பதாக வந்த புகாரையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஓமலூர், பஸ் ஸ்டாண்ட் அருகே, மொபைல்ஃபோன் மற்றும் காயின் பாக்ஸ் பழுது பார்க்கும் கடை வைத்திருப்பவர் கணேசன், 37, இவர், வெள்ளக்கல்பட்டி பகுதியில் உள்ள "சாய் அக்வா டெக்' "மற்றும் "உல்லாஸ்' என்ற குடிநீர் சுத்திகரிக்கும் நிறுவனத்தில் இருந்து, தினமும் குடிநீர் கேன் வாங்கி விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம், அந்நிறுவனத்தில் வாங்கிய குடிநீர் கேனில், புழுக்கள் நெழிவதை பார்த்து கணேசன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தார். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் ஆகியோர், ஓமலூரில் கணேசன் என்பவரின் கடையில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் கேனை பரிசோதித்தனர். அப்போது, சீல் உடைக்காமல் இருந்த கேனில், நான்குக்கும் அதிகமான புழுக்கள் நெழிவதை கண்டு, குடிநீர் கேனுக்கு சீல் வைத்து, பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில், புழுக்கள் உள்ளதாக எங்களுக்கு புகார் வந்தது. அதையடுத்து, குடிநீரை பரிசோதித்ததில், சீல் உடைக்கப்படாமல் இருந்த குடிநீர் கேனில், புழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த கேனில், குடிநீர் தயாரிக்கப்பட்ட தேதி சீலிடப்படவில்லை. நிறுவனத்தின் பெயர் உள்ள ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட்டுள்ளது. புழுக்கள் இருந்த குடிநீர் கேனை சீல் வைத்து, ஆய்வுக்காக சென்னை அனுப்ப உள்ளோம். ஆய்வில், குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படாதது தெரிந்தால், சம்மந்தப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மற்றும் குடிநீர் விநியோகஸ்தர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment