Aug 30, 2014

உணவு பாதுகாப்பு அதிகாரி முற்றுகை வெல்ல உற்பத்தியாளர்கள் அதிரடி

சேலம்; சேலம் மாவட்ட கரும்பு வெல்ல உற்பத்தியாளர்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவை முற்றுகையிட்டனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை மூல பிள்ளையார் கோவில் அருகில், வெல்ல மண்டி உள்ளது. தேக்கம்பட்டி, வட்டக்காடு, மூங்கப்பாடி, காமலாபுரம், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த, வெல்ல உற்பத்தியாளர்கள், இங்கு வந்து வெல்லத்தை ஏலம் விடுவது வழக்கமாகும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, செவ்வாய்ப்பேட்டையில் உள்ள வெல்ல கடைகளில் ஆய்வு செய்துள்ளார். ஆய்வில், "சபோலா ஹைட்ரோஸ்’ என்ற வேதி பொருள், வெல்லத்தில் அதிகளவு கலந்துள்ளது’ என, வியாபாரிகளிடம், உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா தெரிவித்துள்ளார்.
மாதிரிக்காக எடுத்துவரப்பட்ட வெல்லம், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை வெல்ல மண்டியில், நேற்று ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெல்ல உற்பத்தியாளர்கள், 150 டன் வெல்லத்துடன் மண்டிக்கு வந்துள்ளனர்.
வியாபாரிகள் யாரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை. உற்பத்தியாளர்களிடம், "வெல்லத்தில், கலப்படம் செய்யப்படும் வேதி பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்’ என, தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி அடைந்த வெல்ல உற்பத்தியாளர்கள், சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு சென்று, பாதுகாப்பு அலுவலர் அனுராதாவை முற்றுகையிட்டு, "நாங்கள் பல ஆண்டாக இதே முறையில் தான் வெல்லம் உற்பத்தி செய்து வருகிறோம். திடீரென்று நீங்கள், எவ்வாறு இப்படி கூறுகிறீர்கள். நேற்று ஏலம் நடப்பதாக இருந்தது. வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காததால், 150 டன் வெல்லம் நஷ்டமாகியுள்ளது’ என்றனர்.
அதற்கு அனுராதா, ""சபோலா ஹைட்ரோஸ் என்ற வேதி பொருள், வெல்லத்தில் அதிகளவு கலக்கப்படுவதாக வந்த புகாரால் தான் ஆய்வு செய்யப்பட்டது. பகுப்பாய்வு முடிவுக்கு பிறகே, இதுகுறித்து தெரிவிக்கப்படும்,” என்றார். திடீர் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment