சென்னை : ஓட்டல் உள்ள 'கிளப்'பில், 'ஹுக்கா' பயன்படுத்த, உரிமம் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, நீலாங்கரையில் உள்ள, 'டிரிசில் ரெஸ்டாரண்ட்' உரிமையாளர் பிரகாஷ், தாக்கல் செய்த மனு: எங்கள் ஓட்டலோடு இணைந்து, 'கிளப்'பும் உள்ளது. அங்கு, 'ஹுக்கா பார்' நடத்த, அனுமதி கோரி விண்ணப்பித்தேன். உணவு மற்றும் பாதுகாப்பு துறை கமிஷனர் அளித்த பதிலில், புகையிலையை, உணவு பொருள் வடிவத்தில் விற்பனை செய்ய, தடை உள்ளதாக, தெரிவித்துள்ளார். நாங்கள் வழங்கும், 'ஹுக்கா', மூலிகை இலைகள் மற்றும் பாதி உலர்ந்த பழங்களில் இருந்து எடுக்கப்பட்ட திரவம் ஆகியவை கலந்தது. இதில், புகையிலை, நிகோடின் கலப்பு இல்லை. மும்பை உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 'ஹுக்கா' பயன்படுத்த, அனுமதி வழங்கி உள்ளது. அதுபோல், அரசும் நிபந்தனைகள் விதிக்கலாம்; ஆனால், தடை விதிக்க முடியாது.
சட்டத்தில், 'ஹுக்கா' புகைக்க தடை இல்லாத போது, அந்த வர்த்தகத்தை தடுப்பது சரியல்ல. காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில், 'ஹுக்கா' பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, 'ஹுக்கா' வர்த்தகத்தில், அரசு குறுக்கீடு செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும். எங்களுக்கு, 'ஹுக்கா பார்'க்கான, உரிமம் வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி சத்தியநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க, உணவு பாதுகாப்பு கமிஷனர் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி, 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார். விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment