Jul 30, 2014

ஜவ்வரிசியில் ஆசிட் கலப்பு 20 சேகோ ஆலைகளில் அதிகாரிகள் சோதனை


நாமக்கல், ஜூலை 30:நாமக்கல்
மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள ஜவ்வரிசி ஆலைகளில், ஜவ்வரிசி தயாரிப்பின் போது மரவள்ளிகிழங்கு துண்டுகளாக வெட்டி அதில் பிரஷர்மோட்டர் என்ற பம்ப்மூலம் ஆசிட் தெளிப்பதாக விவசாயிகள் கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் அளித்தனர்.
ஆசிட் கலப்பதால் ஜவ்வரிசி பளீச்சென வெள்ளை நிறத்தில் இருக்கும். அதை சாப்பிடும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை, நியமனஅலுவலர் தமிழ்ச்செல்வன் மாசுகட்டுப்பாட்டுவாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி மற்றும் உதவிபொறியாளர் ரங்கராஜ், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சண்முகம், நரசிம்மன், ராமசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் ராசி புரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் பகுதியில் உள்ள 20 ஜவ்வரிசி உற்பத்தி தொழிற்சாலைகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை திடீர் சோதனை செய்தனர்.
ஆசிட் கலப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பிரஷர் மோட்டார் பம்பை பயன்படுத்த வைக்கப்படும் பெட் முற்றிலுமாக நீக்க வேண்டும் என ஆய்வின் போது அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் ரசாயனம் வெளியே செல்ல பயன்படுத்தப்படும் இடத்தை ஒரு வாரத்தில் முற்றிலுமாக அடைக்க அறிவுறுத்தப்பட்டது. 4 ஜவ்வரிசி ஆலைகளில் 4 உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கண்காணிப்பு குழுவின் இரவு நேர சோதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெறும். இயற்கையான முறையில் ஜவ்வரிசி தயாரிப்பு உறுதிப்படுத்தப்படும்.
ரசாயனக் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் ஜவ்வரிசி ஆலை சீல் வைத்து மூடப்படும் என உணவுபாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment