ஆத்தூர், ஜூலை 3:
ஆத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் எண்ணெய் மில்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், முள்ளுவாடி, மாரிமுத்து ரோடு ஆகிய பகுதியில் 20க்கும் மேற்பட்ட எண்ணெய் தயாரித்து பாக்கெட் செய்து விற்பனை செய்யும் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணெய் மில்களில் சமையல் ஆயில் என்ற பெயரில் பாம்ஆயில் மற்றும் பருத்தி ஆயிலை கடலை எண்ணெயுடன் கலந்து தரமில்லாத உணவு எண்ணெய் தயாரிக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் அனுராதாவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனை அடுத்து கடந்த மாதத்தில் இந்த ஆயில் மில்களில் சோதனை நடத்தி அவ்வாறு தரமில்லாத எண்ணெய்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆத்தூருக்கு வந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் அனுராதா பஸ்நிலையம் அருகில் இருந்த மளிகை கடையில் விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டை வாங்கி அதனை பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பினார்.
அந்த சோதனையில் அந்த எண்ணெய் தரமில்லாதது என தெரியவந்தது. இதனை அடுத்து அந்த எண்ணெய் பாக்கெட் செய்து விற்பனை செய்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் நேற்று ஆத்தூர் வந்திருந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் அனுராதா முள்ளுவாடி பகுதியில் உள்ள எண்ணெய் பாக்கெட் செய்யும் ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு தரமில்லாத எண்ணெய் என பகுப்பாய்வு சோதனையில் தெரியவந்த எண்ணெய் மீண்டும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனை அடுத்து அந்த ஆலையில் உரிமையாளர் நடேசனை அழைத்து 15 தினங்களுக்குள் என்ன எண்ணெய் பாக்கெட் செய்யப்படுகிறதோ அதன் பெயரையும் அதற்குரிய படத்தை மட்டும் பாக்கெட்டின் மீது போட்டு விற்பனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் மீறி கடைகளில் சோதனை செய்யும் போது தவறு நடப்பது தெரியவந்தால் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என எச்சரிக்கை செய்தார்.
No comments:
Post a Comment