நெல்லை, ஜூன் 4:
கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து நெல்லையில் பழக்கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
மாம்பழ சீசன் களைகட்டியுள்ளதால், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் நெல்லைக்கு வந்துள்ளன. பல கடைகளில் பழங்களுக்கு பதிலாக காய்கள் வந்திறங்கியுள்ளதால் அவற்றை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த மாம்பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன், அதிகாரிகள் ரமேஷ், முத்துகுமாரசாமி, சங்கரலிங்கம், கலியன்ஆண்டி, கிருஷ்ணன், காளிமுத்து, மகாராஜன் ஆகியோரது தலைமையிலான அலுவலர்கள் நேற்று நெல்லையில் உள்ள பழக்கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோயில் தெருவில் உள்ள பழக்கடையின் குடோனிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் ஜங்ஷன், டவுன், பாளை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடந்தது. இதில் கார்பைடு கல் வைக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங் கள் பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப்பட்டன. மெழுகு தடவிய ஆப்பிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் கூறுகையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து பழக்கடை, குடோன்களில் சோதனை நடத்தினர். இதில் கார்பைடு கல் மாம்பழங்கள், மெழுகு தடவிய ஆப்பிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கார்பைடு கல்லுக்கு பதிலாக வேளாண்துறை மூலம் வழங்கப்படும் எத்தனாலை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்த தீமையும் இல்லை என்றார்.
நெல்லையில் கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கள் பழக்கடை குடோன்களில் சோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment