Jun 4, 2014

புகையிலைக்கு எதிராக ஒரு போர்!

புகையிலைப் பொருட்களை உட்கொள்வதால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று ஒரு மருத்துவருக்கே உரிய அக்கறையுடன் பேசுகிறார் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷவர்த்தன்.
புகையிலைப் பொருட்களுக்கான வரியை உயர்த்தினால் சிகரெட், குட்கா போன்ற பொருட்களின் விலையும் உயரும். அதன்மூலம் சாதாரண மனிதர்கள் அவற்றை வாங்குவதும் குறையும் என்பது அவருடைய திட்டம். புகையிலை தரும் பாதிப்பு அதைப் பயன்படுத்துபவருக்குப் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பாதிப்புகளை உண்டாக்குவதுடன் முடிவடைவதில்லை. அந்த நோய்களுக்கான சிகிச்சை, மருத்துவ செலவுகள் என்று இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு மட்டும் ரூ.16,800 கோடி செலவிடப்படுகிறது என்ற தகவல் சுகாதாரத் துறையினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் அமைதியிழக்க வைத்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் இந்திய பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘புகையிலை தொடர்பான நோய்களால் இந்தியாவில் ஏற்படும் பொருளாதாரச் சுமை' என்ற அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் நோய்களுக்கு நேரடியாகச் செலவிடப்பட்ட மொத்தச் செலவு ரூ. 16,800 கோடி என்றும், மறைமுகமான செலவு ரூ.14,700 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர, குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிடுவதால் ஏற்பட்ட செலவு ரூ.73,000 கோடியாகும்.
“நாட்டின் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணைந்து புகையிலைக்கு எதிராகப் போராட வேண்டும். புகையிலை உபயோகிப்பவரிடம் சென்று, ‘இதைப் பயன்படுத்துவதால் உங்கள் வாழ்நாளுக்கு முன்னதாகவே மரணமடைந்துவிடுவீர்கள். எனவே, தயவுசெய்து இந்தப் பழக்கத்தைக் கைவிடுங்கள்’ என்று நாட்டு மக்கள் அனைவரும் அறிவுறுத்த வேண்டும்” என்று ஹர்ஷவர்த்தன் அறைகூவல் விடுத்துள்ளார். வரிவிதிப்பால் புகையிலைப் பொருட்களின் விலை 10% உயரும். அதன் தொடர்ச்சியாக, அவற்றின் பயன்பாடு 4 முதல் 5% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கைதான் எல்லாமே!​

No comments:

Post a Comment