கரூர், ஜூன் 26.
கலப்பட உணவு பொருள்களை தடுக்க அக்மார்க் தரசான்று பெற்றவற்றை வாங்கி பயன்படுத்துமாறு ஆய்வக அலுவலர் தெரிவித்துள்ளார்.
மாநில அக்மார்க் ஆய்வக கரூர் வேளாண்மை அலுவலர் டேவிட்ராஜசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாது:
அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுபொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும், கலப்படமற்றதாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் மனித உடலில் பலநோய்கள் உண்டாகிறது. இவற்றை தவிர்த்து தரமான கலப்படமற்ற, சுத்தமான உணவுபொருட்களை நுகர்வோர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள அக்மார்க் திட்டம் உதவிசெய்கிறது.
கலப்பட உணவு பொருட்களினால் உண்டாகும் நோய்கள்:
வேகமாக வளர்ந்து வரும் நாகரீக உலகில் கலப்பட உணவு பொருள்கள் மூலம் பலப்பலநோய்கள் உருவாகிறது. குறிப்பாக கண்பார்வை மங்குதல், வயிறுவலி, வயிற்றுப்போக்கு, நெஞ்சுவலி, மாரடைப்பு, தோல்நோய், உடலில்கட்டி, ஆண் மலட்டுத்தன்மை, புற்றுநோய், மூளையின் பணி முடக்கம், போன்ற நோய்கள் கலப்பட பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. உணவில் கலப்படம் என்பது இன்று சமூகநோய் ஆக உள்ளது.
உணவு கலப்படத்தை விரட்டும் போர்ப்படை தளபதியாக அக்மார்க் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி உணவு பொருள்களில் இருந்து மாதிரி எடுத்து பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தாவர சமையல் எண்ணைகளுக்கு அமிலத்தன்மை சோதனை, ஒளி விலகல் சோதனை, அடர்த்தி எண் சோதனை, அயோடின் மதிப்புசோதனை, பிற எண்ணை கலப்பட சோதனை போன்ற பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் பல பிரத்யேக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவில் கலப்படம் இல்லாத, சுத்தமான தரமான உணவு பொருள்களுக்கு அரசின் அக்மார்க் முத்திரை சீட்டு ஒட்டப்படுகிறது.
அக்மார்க் முத்திரை சீட்டுஒட்டி வரும் உணவு பொருள்களை வாங்கி பயன்படுத்துவதால் நுகர்வோர்கள் பணத்தின் மதிப்பிற்கு ஈடான சத்துகுறையாத உணவு பொருள்களை பெறமுடியும். அத்துடன் கலப்படக்கொடுமை என்ற சமூகநோயை சமூகத்தில் இருந்து விரட்ட முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment