தர்மபுரி,
நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள் ,காய்கறி கடைகள், கையேந்தி பவன்கள் உள்பட அனைத்து உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு லைசென்ஸ் பெற வேண்டும் என பிப்ரவரி 14ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 4ம் தேதி வரை கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்பட்டு மத்திய அரசு கெடு விதித்திருந்தது.
இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல்கள், உணவகங்கள், சாலையோர கையேந்தி பவன்கள் ஆகியவற்றில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.
இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட் குடிநீர் பேக்கிங் நிறுவனங்கள் முறையாக குடிநீரை பேக்கிங் செய்து அனுப்புகின்றனரா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி வழங்கும் குடிநீர் உப்பு சுவை அதிகமாக இருப்பதால் இதன் மூலம் தாகம் தீர்வதில்லை. இதனால் 25 லிட்டர் வாட்டர் கொள்ளளவுள்ள சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரை அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இந்த சுத்திகரிக்கப்பட்டதாக விற்பனை செய்யப்படும் குடிநீரும் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதில்லை என நினைக்கும் அளவிற்கே குடிநீர் உள்ளது.
கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரும் உப்பு சுவையுடன் காணப்படுகிறது. ஒரு சில குடிநீர் நிறுவனங்கள் போதிய அளவிற்கு சுத்திகரிப்பு செய்யாமல் குடிநீரை கேன் களில் அடைத்து விற்பனை செய்யக்கூடும் என நினைக்கிறோம். எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்களை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படுகிறதா என உரிய சோதனை கருவிகளுடன் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம் பொதுமக்களிடையே அதிகாரிகள் மீதும், குடிநீர் விற்பனையாளர்கள் மீதும் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
No comments:
Post a Comment