சேலம், மே 22:
சேலத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள டீ கடைகள், பெட்டி கடைகள், ஜூஸ் கடைகள் மற்றும் பலகார கடைகள் உள்பட 35க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள், தேதி குறிப்பிடப்படாத மோர், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அங்குள்ள ஜூஸ் கடைகளில் ஆய்வு செய்தபோது, சுவைக்காக கெமிக்கல் ஆசிட் கலக்கப்படுவதும், அழுகிய பழங்களை கொண்டு ஜூஸ் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து அழுகிய நிலையில் உள்ள பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஜூஸ் தயாரிப்பிற்கு கெமிக்கல் ஆசிட் பயன்படுத்த கூடாது எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறுகையில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால், அவற்றை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து செய்யப்படும். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கு சுகாதாரமான பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, இளங்கோவன், புஷ்பராஜ், அசோக்குமார், அன்புபழனி, ஜெகன்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment