Mar 27, 2014

கிருஷ்ணகிரி வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் கலப்பட மரவள்ளிக்கிழங்கு மாவு - விவசாயிகள் சங்கம் புகார்

கிருஷ்ணகிரி, மார்ச் 27: 
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கலப்பட மரவள்ளிக் கிழங்கு மாவு வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என தமிழக விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. 
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமகவுண்டர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகளால் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலைகளுக்கு தரமான கிழங்கு மாவு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிப்பதற்காக அனுப்பப்படுகிறது. 
இவ்வாறு அனுப்பப்படும் மரவள்ளி கிழங்குடன், சில ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்படம் செய்து, அத்துடன் அரசால் தடை செய்யப்பட்ட விஷத்தன்மை உள்ள ரசாயனங்களையும் சேர்த்து கிழங்கு மாவு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச்சுகளை தயாரிப்பதாக தெரிகிறது. 
இவ்வாறு தயாரிக்கப்படும் கிழங்கு மாவு ஜவ்வரிசி, அரசு உணவு தரக்கட்டுப்பாடு அனுமதி பெறாமல், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வணிகவரி மற்றும் எந்த விதமான பரிசோதனையும் இல்லாமல் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பொருட்களை உண்பவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆண்மை இழத்தல் மேலும் பல மோசமான நோய்கள் உண்டாகும். மேலும் இதனால் அரசுக்கும் வரி இழப்பு ஏற்படுகிறது. 
இதை தடுக்கவில்லை என்றால், வருங்காலத்தில் மரவள்ளிக்கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருட்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, நுகர்வோர்கள் இதை ஒதுக்கித்தள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 
எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கலப்பட பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான பொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment