சென்னை, மார்ச் 27:
தமிழக ஆளுநர் ரோசய்யா, நேற்று மாலை 4.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திராவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ட்ரலில் டிஎஸ்பி தில்லை நடராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீ சாரும் இணைந்து, நேற்று காலை முதல் தீவிர கண்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சோதனை களையும் செய்தனர்.
அப்போது பார்சல் அனுப்பும் இடத்தில் 22 மூட்டைகள் இருந்ததை பார்த்து சந்தேகத்தின்பேரில் அவற்றில் ஒன்றை பிரித்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை பொருட்கள் இருந்தன. விற்பனைக்கான பாக்கெட்களில் அடைக்காமல் மூட்டையில் மொத்தமாக திணித்து வைக்கப்பட்டிருந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அனுப்ப பதிவு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு மூட்டையிலும் 55 கிலோ பான்பராக், புகையிலை பொருட்கள் இருந்தன.
சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பான்பராக் மூட்டைகளை கைப்பற்றி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மூட்டைகளை பதிவு செய்ய கொடுத்திருந்த சென்னை முகவரி போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் விசாகப்பட்டினம் முகவரி குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. பறிமுதல் செய்த மூட்டைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
No comments:
Post a Comment