அன்னூர்:"சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களும் உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்' என அன்னூரில் நடந்த பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்ணம்மாள் தலைமை வகித்தார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் நாசர் ஷெரீப் பேசியதாவது:
"உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006', 2011 முதல் அமல்
படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம்
மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, மாநில அரசால் நடைமுறைப் படுத்தப்படுகிறது. உணவு தயாரித்தல், சேமித்தல், வழங்குதல், விற்தல் ஆகிய தொழில் செய்வோர் மற்றும் லாப நோக்கமில்லாமல் அன்னதானம் செய்வோர் என அனைவரும் இந்த சட்டத்தில் வருகின்றனர். இத்தொழில் செய்யும் அனைவரும் ஆண்டுக்கு ரூ. 100 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளும் பதிவு செய்ய வேண்டும். பிப்., 4ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் ஆன்-லைன் வழியாக மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில், சமைத்த உணவை இரண்டு மணி நேரத்தில் பரிமாற வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் உணவுத்தரமில்லாத பாத்திரங்களில் சமைக்கவோ, சேமிக்கவோ, பரிமாறவோ கூடாது. காய்கள், கீரைகளை முடிந்தவரை, குழாய் நீரில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், 60 நிமிடம் நீரில் ஊற வைத்து பின் பயன்படுத்த வேண்டும். சமையலறையில் தலையுறை அணிவது அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசாமி, பி.டி.ஓ., ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். அன்னூர் ஒன்றியத்திலுள்ள 96 சத்துணவு மையங்களின், சமையலர், உதவியாளர், 110 அங்கன்வாடி மையங்களின் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment