திருப்பூர், ஜன.10:
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் விற்பனை நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, மண்ணரைப் பகுதியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் முருகன் மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் ஐ.எஸ்.ஐ., தரச்சான்றிதழ் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் ஏதும் பெறாமல் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன், உணவு பாதுகாப்பு மற்றும் திருப்பூர் மாவட்ட நியமன அலுவலகம், தடையின்மைச் சான்றிதழ் பெறுமாறு குடிநீர் விற்பனை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அந்நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய், ஆய்வாளர்கள் முருகேசன், தங்கவேல் உள்ளிட்டோர் நேற்று திடீரென அந்நிறுவனத்தில் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment