சேலம், டிச.13-சேலத்தில் ரூ.83 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
சேலம் 5 ரோடு மற்றும் சூரமங்கலம் பகுதிகளில் போதை பொருட்களான பான்பராக், குட்கா, புகையிலை போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி அனுராதாவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திருமூர்த்தி, பாலு மற்றும் சூரமங்கலம் போலீசார் இணைந்து சேலம் 5 ரோடு, சூரமங்கலம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை சோதனை நடத்தினர்.
201 கிலோ பறிமுதல்
அப்போது, அந்த பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் சோதனை மேற்கொண்டதில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை போன்றவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த போதை பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மொத்தம் 201 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.83 ஆயிரம் ஆகும். மேலும் இவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.
No comments:
Post a Comment