Oct 21, 2013

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்ட விதிகளை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்தல்


தீபாவளி இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்வோரில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்ட விதிகளை உரிய வகையில் கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி மற்றும் திருமருகல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு, உணவு விற்பனை நிலையங்களில் இனிப்பு, கார வகைகளை வாங்கும்போது, பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற கடைகளில், தரமான, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டுள்ளவற்றை மட்டுமே வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ல் அனுமதிக்கப்படாத நிறமிகளை பயன்படுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நிறமிகளையும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தக் கூடாது,

தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை சுகாதாரமான இடத்தில், தூசி மற்றும் ஈ உள்ளிட்டவை நெருங்காத வகையில், கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே உணவுப் பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட சில உணவு விற்பனை நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை தவறாகப் பயன்படுத்தியும், சிலர் தங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் என போலியாக சித்தரித்துக் கொண்டும் தீபாவளி இனாம் கோருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, உணவுப் பாதுகாப்புத் துறையின் பெயரால் யாரேனும் தீபாவளி இனாம் கோரினால் அல்லது லஞ்சம் கேட்டால், வியாபாரிகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளிக்கலாம். அல்லது நாகை காடம்பாடியில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு 04365- 249090 என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment