Sep 25, 2013

திருச்சி நகரில் ரூ.1 லட்சம் புகையிலை பொருள் அழிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


திருச்சி, செப். 25:
திருச்சி நகரில் தடை செய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான புகையிலை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் போன்ற பொருட்கள் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சியிலும் கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவின்பேரில், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமையில் மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அல்லி ஆகியோர் முன்னிலையில் சுகாதார அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று திருச்சியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, நடுகுஜிலி தெரு, காந்தி மார்க்கெட் பகுதிகளில் பெட்டி கடைகள், மளிகை கடைகள், மொத்த வியாபாரி குடோன்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.1லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பொருட்கள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.
ஆணையர் எச்சரிக்கை
புகையிலால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்கள் தடுக்கும் வகையில் குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் போன்ற பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment