சேலம் நெத்திமேடு பகுதியில் இயங்கிய போலி
குடிநீர்த் தொழில்சாலைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள்
வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீட்டுக்கு
புழுக்களுடன் கூடிய அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்ததை அடுத்து, இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர்
சரோஜ்குமார் தாகூர். அன்னதானப்பட்டியில் உள்ள இவரது வீட்டுக்கு நெத்திமேடு
பகுதியில் உள்ள ஒரு குடிநீர்த் தொழில்சாலையில் இருந்து 20 லிட்டர் கேனில்
வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தக் குடிநீரில்
புழுக்கள் நெளிந்ததுடன் அசுத்தமாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சரோஜ்குமார் தாகூரின் வீட்டில் பணியாற்றும் முதல் நிலைக்
காவலர் ஏ.சுரேஷ், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தி.அனுராதாவிடமும்
புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள்
சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொழில்சாலையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
விசாரணையில், அந்தத் தொழில்சாலை உரிமம் பெறாமலும், போலியான முத்திரைகளை
பயன்படுத்தியும் செயல்பட்டு வந்தது தெரிய வந்ததை அடுத்து, அதற்கு உணவுப்
பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், அந்த நிறுவனத்தின்
உரிமையாளர் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த தீபக் (28) என்பவரை காவல் துறையினர்
விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து டாக்டர் அனுராதா கூறியது: நெத்திமேடு பகுதியில் செயல்பட்டு
வந்த போலி குடிநீர்த் தொழில்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த
நிறுவனத்துக்காக ஏற்கெனவே உரிமம் கோரி பெறப்பட்ட விண்ணப்பத்தை நாங்கள்
நிராகரித்திருந்த நிலையில், தீபக் போலியான முத்திரைகளுடன் ஆலையை இயக்கி
வந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 32 குடிநீர்த் தயாரிக்கும் தொழில்சாலைகள்
உள்ளன. இவற்றில் 9 தொழில்சாலைகளுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெறப்படவில்லை.
இதையடுத்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றையும் மூட
விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்
No comments:
Post a Comment