Apr 10, 2013

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்தால் நடவடிக்கை: அமைச்சர் வி.மூர்த்தி

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் வி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.
பால்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி பேசியது:
பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச் சத்தாக முட்டை வழங்குவதுபோல, பால் வழங்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கும், குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பால் வழங்க ஆவன செய்ய வேண்டும். ஆவின் பால் தரமாக இருக்கின்றன. அதனை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
அதேசமயம் தனியார் பால் விற்பனை அதிகம் நடக்கிறது.
ஆவின் பாலைவிட தனியார் பாலின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அடர்த்திக்காக சில பொருள்கள் கலப்படம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
அமைச்சர் வி.மூர்த்தி: பாலில் கலப்படம் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க ஆய்வு செய்யப்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் இந்த ஆய்வு நடைபெறுகிறது. நடமாடும் ஆய்வுக் கூடங்களும் பாலில் செய்யப்படும் கலப்படம் தொடர்பாக ஆய்வு செய்கின்றனர்.
அப்படிக் கலப்படம் செய்தால் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): தனியார் நிறுவனங்களில் பாலில் அடர்த்தி வருவதற்காக சீனாவின் வெள்ளைத் தூளைக் கலக்கின்றனர். இது உடல் நலத்துக்குக் கேடானது. அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வி.மூர்த்தி: நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் நிறுவனத்தைக் குறைகூறும் உறுப்பினர்கள், ஆவின் பால் தரமானது என்று விளம்பரம் செய்யத் தவறாதீர்கள்.
அ.செளந்திரராஜன் (மார்க்சிஸ்ட்): சீனாவில் பாலில் கலப்பிடம் செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது. அந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment