டெங்கு... தமிழகத்தில் அதன் தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, ‘டெங்குவுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை’ என்று ஒரு தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர். `சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் டெங்கு வராமல் தடுக்க மட்டுமே முடியும்; காய்ச்சல் வந்த பிறகு அவை பலனளிக்காது’ என்கிறது மற்றொரு தரப்பு. அதேநேரத்தில் ஒவ்வொரு பிரிவு மருத்துவர்களும் தனித்தனியாக, `எங்களது மருத்துவத்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்று கூறிவருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் பொதுமக்களை தெளிவான ஒரு முடிவெடிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
எனவே, அரசு தரப்பு டெங்குவுக்கு எந்த மாதிரியான மருத்துவச் சிகிச்சையை பரிந்துரைக்கிறது, டெங்கு என்பது என்ன, அதற்கு என்னதான் தீர்வு, அதைத் தடுப்பது எப்படி, நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கலாமா, கூடாதா... இப்படி டெங்கு பற்றி அரசு சொல்லும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். நம் கேள்விகளும், அவற்றுக்கு அவர் தந்த பதில்களும் இங்கே...
“ ‘கொசுக்களால் டெங்கு பரவுவதில்லை’ என்பது போன்ற வதந்திகள் அதிகமாகப் பரவுகின்றன. உண்மையில் டெங்கு என்பது என்ன?"
“டெங்குவின் தாக்கத்தைவிட அது பற்றிய வதந்திகள்தாம் அதிகம். நானும் இதுபோன்ற வதந்திகளைக் கேள்விப்பட்டேன். இவையெல்லாம், டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும், மக்களை மென்மேலும் அச்சுறுத்தக்கூடிய ஓர் அபாயகரமான செயல். எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். அரசு சார்பில் இதைப் பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.''
``எப்படிப் பரவுகிறது?"
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.
`ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.''
"ஏடிஸ் கொசு பகலில்தான் கடிக்கும்; நல்ல தண்ணீரில்தான் வளரும் என்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?"
“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும்; அவை பகலில் கடிக்கும் தன்மைகொண்டவை என அவற்றின் வாழ்க்கைமுறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் இதுதான் உண்மை. ஆகவே, பொதுமக்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.''
“எத்தனை நாள்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் ஏடிஸ் கொசு வளரும்?"
“டெங்கு நோயைப் பரப்பும் `ஏடிஸ்' வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாள்களாகும்.’’
“ஏடிஸ் கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?"
“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாள்களில் கொசுக்களாக உற்பத்தியாகின்றன. `ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.''
“பிற காய்ச்சல்களிலிருந்து டெங்குக் காய்ச்சலை எப்படி அடையாளம் காண்பது, காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?"
“காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சல் மற்றும் உடல்வலியைக் குறைப்பதற்காக 'பாரசிட்டமால்' மாத்திரைகளைச் சாப்பிடலாம். போதுமான ஓய்வு எடுத்து அதிகமான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த மருந்து என்பதில் சந்தேகமில்லை."
``வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?"
“டெங்குக் காய்ச்சலைப் பொறுத்தவரை, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையாக இந்த நிகழ்வுகள் ஏற்படாமல் காப்பாற்ற முடியும். எனவே, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதுதான் நல்லது. அதனால் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுக வேண்டும்."
“டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது?"
“காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்; மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுத்து, அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வந்த பிறகு மருத்துவச் சிகிச்சையைத் தாமதமாகப் பெறுதல், சுயமாக மருந்துகள் சாப்பிடுதல், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுதல், குறைவான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை கூடாது.''
“டெங்குவுக்குத் தடுப்பூசி உண்டா?"
“மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இதற்கான கிளினிக்கல் ட்ரையலில் (ClinicalTrials) ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய அளவிலான அபெக்ஸ் கமிட்டி (Apex Committee) ஒப்புதல் இதுவரை பெறப்படாத நிலையில், டெங்கு தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை."
“கொசு ஒழிப்பு, தொற்றுநோய் ஒழிப்புக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே?"
“அப்படிச் சொல்ல முடியாது. 2017-18-ம் ஆண்டு ரூ.18.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது. இதில் பணியாளர்களுக்கான சம்பளம், மருந்துக்கான ஒதுக்கீடு, மற்ற துறைகளின் பங்களிப்பு ஆகியவை சேர்க்கப்படவில்லை."
“டெங்கு ஆராய்ச்சிக்காக ஏதேனும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதா அல்லது அமைக்கும் திட்டம் உள்ளதா?''
``ஆம். டெங்கு தொடர்பான ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.''
“முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முடியாது என்று தனியார் மருத்துவமனைகளில் கைவிரிக்கிறார்கள். உண்மையில் டெங்கு, காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா?"
"முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில், டெங்கு ரத்தக் கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் சூழல் வந்தால் அதற்கான செலவு சேர்க்கப்பட்டுள்ளது. அதை தனியார் மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது. அப்படி மறுக்கும்பட்சத்தில் 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களிலும் 9444340496 / 9361482899 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்புகொள்ளலாம். டெங்கு பற்றிய சந்தேகங்களுக்கும் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 104 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.''
"ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெருமளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றனவே?"
“அப்படிச் சொல்ல முடியாது. காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.''
“தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக என்ன காரணம்?"
“டெங்கு பாதிப்பு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில்தான் அதிகமாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இலங்கையிலும் டெங்குவின் பாதிப்பு அதிகம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 140 நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் இருக்கிறது. ஆனால், ஏதோ நம் மாநிலத்தில் மட்டுமே டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நோய்களைக் கண்டறிவதற்கான வசதிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.''
"இந்த அளவுக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தக் காரணம், அரசின் செயல்படாத தன்மைதான் என்று குற்றம் சாட்டப்படுகிறதே..?''
“இது உண்மையில்லை. பூச்சியியல் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில், தக்கத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்துத் துறைகளையும் இணைத்து, தற்போது சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதாவது 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், 9,900-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள், 3,500-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 160 பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்திய மருத்துவக் குழுமம் மற்றும் தனியார் மருத்துவர்களும் அரசுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக மக்களை டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் கூடுதலாக ரூபாய் 13 கோடியே 95 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் (24/7) செயல்படும் காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் எலிசா (ELISA) பரிசோதனை முறையில் டெங்குக் காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் மையங்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம். புதிதாக ரூ. 23.50 கோடி மதிப்பில் 837 ரத்த அணு அளவீட்டுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
"டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?"
இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு இரண்டாயிரம் கிலோ நிலவேம்புப் பொடி `டாம்ப்கால்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பல நாள்களாக சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் 35 ஆட்டோக்கள் மூலம் 1,50,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடந்த 2-ம் தேதி அன்று நடைபெற்ற டெங்குக் காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் எல்.இ.டி. திரை வாகனங்கள் மூலம் டெங்கு விழிப்பு உணர்வு வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் பேரணி போன்ற டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு மருந்துக் கடை உரிமையாளர்கள், உணவு வணிகம் செய்பவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83 & 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, சட்டப்படி உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி (Fever Management Protocol) சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உரிய மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்துக் கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை வலுப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு மற்றும் டெங்குக் காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.''
“டெங்கு தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பாக அரசு என்ன எதிர்பார்க்கிறது?"
“பொதுமக்கள் தங்கள் வீட்டில் `ஏடிஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.
காய்ச்சல் குறைந்த பின்னரும்கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும்.
இவற்றைச் செய்வதன் மூலம் `ஏடிஸ்' கொசுக்கள் வளர்வதைத் தடுத்தும், டெங்குக் காய்ச்சல் வராமலும் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசு முழுமுனைப்புடன் செயல்படுத்திவரும் பன்முகத் தொடர் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கெடுத்து டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமை. இந்தப் பணியில் அனைவரும் தமது பங்கை உணர்ந்து செயல்பட்டால் நோய்த் தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்."
No comments:
Post a Comment