இன்று உடல்நலத்தில் அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டைவிட்டுவிடுவார்கள். அது, எந்த உணவோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது; எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்பதுதான். ‘சில உணவுகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அதனால், உணவிலிருந்து கிடைக்கும் சத்துகள் கிடைக்காமல் போகும். சில நேரங்களில் அந்த உணவு செரிமானமாவது பாதிக்கப்பட்டு, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
“உணவு விதிகளைக் கடைப்பிடித்து, விலக்க வேண்டியவற்றை விலக்கினாலே சர்க்கரைநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து விடுபடலாம்; நோயற்ற வாழ்வும் வாழலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி. அத்துடன், எதோடு எதைச் சாப்பிடக் கூடாது; எப்படிச் சாப்பிட வேண்டும்; எதிர் விளைவுகள் அனைத்தையும் குறித்து விரிவாகப் பேசுகிறார் இங்கே...
“பசிக்கும்போது, எப்போது உணவு கிடைக்குமென்று நம் வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பசிக்கும்போது சாப்பிட்டால், உடல் செரிமானத்துக்கான வேலைகளை முடுக்கிவிடும். அப்போது சாப்பிட்டால் அது முறையாக செரிமனமாகி சத்துகளைப் பிரித்து உடலுக்குத் தரும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சிக்கன், மட்டன், மீன் வறுவல் என உங்கள் விருப்பத்துக்கு உள்ளே
தள்ளினாலும், அது கிணற்றில் போட்ட கல்லாக வயிற்றுக்குள்ளேயே கிடக்கும். செரிமானமாகாது. எனவே, பசித்த பின் சாப்பிடுவதுதான் நல்லது. `நேரம் தவறாமல் உணவு சாப்பிடுவதைவிட, பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிடுவதும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதும்தான் சரியான நடைமுறை’ என்கிறது சித்த மருத்துவம். அதேபோல, சில உணவுகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால், அது சில நோய்களை உண்டாக்கிவிடும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல்நலனைப் பாதித்து மரணத்தைக்கூட ஏற்படுத்தும் என்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
எதோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது?
* தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். தூங்கச் செல்வதற்கு முன்னரும் கீரை, தயிரை உணவோடு சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதேபோல கீரையை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. சமைத்த மூன்று மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும்; செரிமானமும் கடினமாகும்.
* வெண்கலப் பாத்திரத்தை நெய் வைக்கப் பயன்படுத்தக் கூடாது. நெய்யை உருக்காமல் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் சூடுபடுத்தி, எண்ணெய் மாதிரியாக்கித்தான் பயன்படுத்த வேண்டும் அல்லது சூடான உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது நெய்யும் எளிதில் செரிமானமாகும், உணவு எளிதாக செரிமானமாகவும் உதவும்.
* தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. தேனை சூடான உணவுடன் சேர்த்தோ, சூடு செய்தோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் கிடைக்காது.
* பழங்களைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறும் வயிற்றிலோ, பசியாக இருக்கும்போதோ வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.
* மீன், கருவாடு சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மீனுடன் பால் சேர்த்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.
* கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல, ஸ்வீட் சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெந்நீர் குடிக்கலாம். ஏனென்றால், இனிப்பு குளிர்ச்சியான உணவு; இதனுடன் குளிர்ச்சியான தண்ணீர் சேரும்போது ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.
* கோதுமையை நல்லெண்ணெயுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.
* பசலைக்கீரையுடன் எள் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.
* வெற்றிலை போடும்போது, எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. மேலும், உடற்பயிற்சி செய்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடலுழைப்பு உள்ள வேலையை சாப்பிட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வரை செய்யக் கூடாது. இது சாப்பிட்ட உணவின் செரிமானத்தைப் பாதிக்கும்.
மேலும், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ இறைச்சியுடன் சேர்த்து சமைத்தாலும், சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும். அதேபோல, உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும் உணவு நஞ்சாகும்" என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி.
No comments:
Post a Comment