தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் உள்ள ஸ்வீட், பேக்கரி கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதி குளிர்பானம், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நேற்று, தம்மம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். பஸ்ஸ்டாண்ட், கடைவீதி, உடையார்பாளையம் பகுதிகளில் உள்ள ஸ்வீட், பேக்கரி, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், ஒரு கடையில், 2.25 லிட்டர் 'செவன் அப்' குளிர்பானம், தலா, 75 ரூபாய்க்கு பதில், 55 ரூபாய் என்ற விலைக்கு, காலாவதியான நிலையில் விற்றது தெரிந்தது. ஸ்வீட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இடம், சுகாதாரமின்றி இருந்தது. மற்றொரு கடையிலும், ஸ்வீட் தயாரிக்கும் இடம், சுகாதாரமின்றி இருந்தது. அங்கு, உணவு பொருட்கள் தயாரிக்க தற்காலிக தடை விதித்து, இரு கடைகளுக்கும், 'நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து, குளிர்பானம் விற்கும் குடோன் ஒன்றுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. பஸ்ஸ்டாண்ட் கடைகளில், மூன்று மூட்டைகள் புகையிலை பொருட்கள், காலாவதி குளிர்பானங்கள், உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: தம்மம்பட்டியில், 15 பேக்கரி, ஸ்வீட் கடைகளில் ஆய்வு செய்தபோது, காலாவதி குளிர்பானம், சுகாதாரமின்றி உணவு பொருள் தயாரித்த, ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. காலாவதி குளிர்பானம் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. போலி சமையல் எண்ணெய் விற்ற கடைகளில், மாதிரி எடுத்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment