தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாகி விட்டன இட்லி மாவு பாக்கெட்டுகள்.
பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எங்கும் கிடைக்கக் கூடியது. எளிதாக வேலை முடிகிறது என்பதால் பலரும் விரும்பக் கூடியதாக இருக்கிறது. ஆனால், இவை எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?
பொது மருத்துவர் அர்ச்சனா முன் வைக்கிற கருத்துகளை கேட்டால் இட்லி மாவு பாக்கெட்டுகளை கனவில் கூட நினைக்க மாட்டோம்!‘‘தென்னிந்திய உணவு... பாதுகாப்பான உணவு என்பது இட்லி, தோசையின் பெரிய ப்ளஸ். அரிசியின் மூலம் நிறைய கார்போஹைட்ரேட்டும், உளுத்தம்பருப்பில் இருந்து புரதமும்,
இட்லி-தோசையின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஆவியில் வேக வைத்து இட்லி சாப்படுவதால் ஜீரணமாவதும் எளிதாகிவிடுகிறது. இதனால்தான் குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் கூட இதைக் கொடுக்கிறார்கள். இவையெல்லாமே அந்த மாவு தரமாகத் தயாராகும் பட்சத்தில்தான்!
கடைகளில் நாம் வாங்குகிற மாவு பாக்கெட்டுகள் பல விதங்களிலும் சந்தேகத்துக்குரியவையே.முதலாவதாக, அரிசியின் தரத்திலேயே கடைக்காரர்கள் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வாய்ப்பு உண்டு. அரிசியில் கல் இருந்தாலோ, புழு இருந்தாலோ நீக்கிவிட வேண்டும்... அரிசியை சுத்தமாகக் கழுவ வேண்டும். கிலோ கணக்கில் அரிசியைக் கொண்டு மாவு அரைக்கிறவர்கள் இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருக்க நிறைய வாய்ப்புண்டு. இதேபோல, உளுத்தம்பருப்பிலும் தரம் குறைந்ததைப் பயன்படுத்தலாம்.
முக்கியமாக எந்த அளவு சுகாதாரமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், எந்த மாதிரியான இடங்களில் தயாரிக்கிறார்கள், மாவு அரைக்கிற பாத்திரங்களின் சுத்தத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறார்களா என்பதும் கேள்விக்கு உரியதுதான். வீட்டில் மாவு அரைத்த பிறகு கிரைண்டரை கழுவி காய வைத்த பிறகுதான், அடுத்த முறை பயன்படுத்துவோம். ஆனால், அவர்கள் தினமும் பயன்படுத்துவதால் முறைப்படி காய வைத்த பிறகு மாவு அரைப்பதற்கும் வாய்ப்பு குறைவு.
இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்றால் மாவு புளிக்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் மாவு புளித்துவிட்டால் அதிக நாட்கள் தாங்காது. இதனால் புளிக்காமல் இருக்கவும், இட்லி சாஃப்ட்டாக இருக்கவும் சோடா உப்பு கலப்பார்கள். இதன் மூலம் மாவு நுரைத்து அளவும் அதிகமாக இருக்கும். கடைக்காரர்களுக்கு இதுவும் ஒருவகையில் லாபம்.
இட்லி மாவு கெட்டுப் போகாமல் இருப்பதற்காகக் கலக்கப்படும் சோடா உப்பு உள்பட சில கெமிக்கல் பிரிசர்வேட்டிவ்கள் பலருடைய உடல்நிலைக்கு ஏற்றுக் கொள்ளாது. அல்சர், அசிடிட்டி, ஃபுட் பாய்ஸன் என பல உடல்நலக் கோளாறுகள் இதனால் வரலாம்.
மாவு அரைக்கிறவர்களின் சுத்தமற்ற கைகளின் வழியாக Pin worm, Hook worm போன்ற புழுக்களும் மாவில் கலக்கும். பலர் கைகளில் நகத்தைக் கூட வெட்டுவதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை வரக்கூடும். எனவே, எல்லா கோணத்திலும் வெளியிடங்களில் விற்கப்படும் மாவு சிக்கல்தான்’’ என்கிறார் டாக்டர் அர்ச்சனா.
``இட்லி மாவு பாக்கெட்டுகள் பயன்படுத்துவதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், தரக்குறைவானவையாக இருக்கலாம் என்பதால் முடிந்த வரைத் தவிர்ப்பதே சிறந்தது’’ என்கிறார் உணவியல் நிபுணரான கௌதமி ராஜேந்திரன்.
‘ஹோட்டல் உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் தவிர்க்கச் சொல்வதைப் போலவே கடைகளில் விற்கப்படும் இட்லி மாவு பாக்கெட்டுகளையும் மருத்துவர்கள் தவிர்க்கவே சொல்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ‘இட்லி மாவு பாக்கெட் பயன்படுத்திய ஒரு குடும்பமே பலியானது’ என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
அதற்கு முழுமையான காரணம் இட்லி மாவுதானா என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், கடைகளில் விற்கப்படும் மாவில் அதற்கு இணையான ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும்போது கொசு விழுந்துவிட்டால் மாவுடன் சேர்த்து கொசுவை எடுத்துப் போடுவோம். ஆனால், கடைகளில் கொசுவை மட்டுமே எடுத்து வெளியில் போடுவார்கள்.
வீடுகளில் மாவு அரைக்கும்போது பெரும்பாலும் உளுந்து, வெந்தயம் தவிர வேறு எதையும் சேர்க்க மாட்டோம். ஆனால், கடைகளில் விற்கப்படும் மாவில் வெள்ளை நிறத்துக்காகவும், இட்லி உப்பலாக வரவேண்டும் என்பதற்காகவும் நிறைய கலப்படங்கள் நடக்கிறது. இதுபோன்ற பல சங்கடங்கள் கடைகளில் விற்பனையாகும் இட்லி மாவு பாக்கெட்டுகளில் உள்ளது.
இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டிலேயே மாவு அரைத்து வைத்துக் கொள்வது நல்ல வழி. உடனடியாகப் பயன்படுத்துகிற மாவுக்கு உப்பு சேர்த்தும், அடுத்தடுத்த நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டிய மாவுக்கு உப்பு சேர்க்காமலும் ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதற்காக, நீண்ட நாட்களுக்கும் மாவு வைத்துக் கொள்வதும் தவறு. 5 நாட்கள் வரை தேவையான மாவை அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
தவிர்க்கவே முடியாத பட்சத்தில், உங்கள் நம்பிக்கைக்குரிய இடத்தில் மட்டும் மாவு பாக்கெட் வாங்கிப் பயன்படுத்துங்கள். முன்பின் தெரியாத இடங்களில் மாவு வாங்கிப் பயன்படுத்தாமல் இருப்பதே உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது’’ என்று எச்சரிக்கிறார் கௌதமி.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
திருநெல்வேலி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம்...‘‘தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கடைகளில் விற்கப்படும் மாவு எந்த அளவுக்குத் தரமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய சோதனை ஒன்று நடத்தியது. அந்த சோதனையில் E.coli என்ற பாக்டீரியா கடைகளில் விற்கப்படும் மாவில் நிறைய இருப்பதாகத் தெரிய வந்தது. கழிவறை சென்ற பிறகு கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
உணவுப்பொருட்களைக் கையாள்கிறவர்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாத பட்சத்தில்தான் இந்த பாக்டீரியா உணவில் பரவுகிறது. இதிலிருந்தே இட்லி மாவு பாக்கெட்டுகள் எந்த அளவுக்கு சுகாதாரமானவை என்பதை யோசித்துக் கொள்ளலாம்.தவிர்க்க முடியாத நேரத்தில் மாவு பாக்கெட்டுகள் வாங்கும்போது மாவு தயாரிக்கிறவர்களின் நம்பகத்தன்மை, தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டிருக்கிறதா, முறையாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு இடத்தில் தரமில்லாமல் மாவு தயாரிக்கப்படுகிறது என்று சந்தேகப்படும் பட்சத்தில், அந்த மாவின் மாதிரியை சேகரித்து பில்லுடன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கலாம். சென்னையில் இருக்கும் கிங் இன்ஸ்டிடியூட் உள்பட கோயமுத்தூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, பாளையங்கோட்டை என 6 இடங்களில் உணவு பகுப்பாய்வுக்கூடங்கள் இருக்கின்றன. இந்த பரிசோதனை நிலையங்களில் தரக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் அரசு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா இடங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் இருக்கிறார்கள். நகராட்சியில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களிடமும் புகார் அளிக்கலாம்.’’
மாவு அரைக்கிறவர்களின் சுத்தமற்ற கைகளின் வழியாக புழுக்களும் மாவில் கலக்கும். பலர் கைகளில் நகத்தைக் கூட வெட்டுவதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை வரக்கூடும். எனவே, எல்லா கோணத்திலும் வெளியிடங்களில் விற்கப்படும் மாவு சிக்கல்தான்.
No comments:
Post a Comment