சேலம்: வெல்ல மார்க்கெட்டில் நேற்று ஏலம் நடந்த போது உள்ளே நுழைந்த உணவு பாதுகாப்பு அலுவலர், 'கேட்டை இழுத்து மூடுங்கள், யாரும் வெளியே செல்லக்கூடாது' என கூறி, 3 மணி நேரத்துக்கும் மேல், உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை சிறை பிடித்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரியின் மீது, போலீசில் புகார் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு அலுவலரின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள வெல்ல மார்க்கெட்டில், தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களில், வெல்லம் விற்பனைக்கு வருவதும், அதை ஏலத்தின் அடிப்படையில், வியாபாரிகள் கொள்முதல் செய்வதும் வழக்கம்.
இழுத்து மூட உத்தரவு:
நேற்று காலை ஏலத்தின் போது, அங்கு வந்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, 'வாகனங்கள் மட்டுமின்றி, ஆட்களும் யாரும், நான் கூறும் வரை மார்க்கெட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது' என, கூறி கேட்டை இழுத்து மூட உத்தரவிட்டார். இதில், வெல்ல வியாபாரி ஸ்ரீதர் என்பவர், 'ஆட்களை சிறை பிடிக்கவோ, வெளியே செல்லக்கூடாது என கூற அதிகாரம் இல்லை' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசை வரவழைத்த அனுராதா, தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, ஸ்ரீதர் மீது புகார் அளித்தார். இப்பிரச்சனையால், காலை, 8.30 மணியிலிருந்து, 12 மணி வரை, யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை உணவுக்கு கூட வெளியே செல்ல முடியாத விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். 'எதற்காக கேட்டை மூடி வைத்துள்ளீர்கள்?' என அனுராதாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி பின், 'நான் எதுவும் கூறவில்லையே!' என கூறி விட்டு, 12 மணிக்கு மேல் கேட்டை திறக்க உத்தரவிட்டார்.
வெல்லத்தை காணவில்லையாம்:
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: கடந்த, ஏழு மாதங்களுக்கு முன் உற்பத்தியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 2,565 மூட்டை வெல்லத்தை, உற்பத்தியாளர் சங்கத்தின் பொறுப்பில் வைத்திருந்தேன். பிப்ரவரி, 3ம் தேதி வந்து பார்த்த போது, பறிமுதல் செய்த வெல்லம் காணவில்லை. அதற்கு விளக்கம் தரும்படி, உற்பத்தியாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் தர வந்தேன். வெல்லம் கொண்டு செல்லும் போது, மூடியபடி கொண்டு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தியபோது, ஸ்ரீதர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவர் மீது புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்மொழி அனுமதி
சேலம் மாவட்ட கரும்பு வெல்லம் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட, 2,565 மூட்டை வெல்லத்தை உணவு பாதுகாப்பு அலுவலர் எடுத்துக்கொள்ள வாய்மொழியாக அனுமதியளித்தார் எனக்கூறி, சங்க நிர்வாகிகள் ராஜாமணி உள்ளிட்டோர் தலைமையில், கடந்த ஜனவரி, 28 ம் தேதி அனைத்து வெல்ல மூட்டைகளையும் உரிமையாளர்கள் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து நான் உறுதிபடுத்திக்கொள்ள, உணவு பாதுகாப்பு அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. தற்போஆ நான் அனுமதியளிக்கவில்லை என, எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளார். இது பற்றி, சங்கத்தின் செயற்குழுவை கூட்டி மேல் நடவடிக்கைக்கு முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாடகம் ஆடுகிறார்
புகாருக்குள்ளான வியாபாரி ஸ்ரீதர் கூறியதாவது: நான் அவசர வேலை காரணமாக வெளியே செல்ல முயற்சித்த போது, உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருமையில் திட்டினார். மார்க்கெட்டில் உள்ள வெல்லத்தை பறிமுதல் செய்யட்டும், சோதனை செய்யட்டும், ஆட்களை வெளியே செல்லக்கூடாது என, கூறி சிறைபிடிக்க அதிகாரம் உள்ளதா எனக்கேட்டது தவறாம். இவர் வாய்மொழியாக அனுமதியளித்த பின் தான், கெட்டுப்போன, 2,565 மூட்டை வெல்லத்தை எடுத்துப்போனதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதை மறைக்க இங்கு நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment