நிர்ணயிக்கப்பட்ட அளவை விட காரீயம் கூடுதலாக இருந்த காரணத்தினால்தான், மேகி நூடுல்ஸ்க்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நுாடுல்ஸ், பல சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சுமார் 67 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டன.
இதற்கிடையே இந்த தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மும்பை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட ஆய்வகங்களில் மேகி நூடுல்சை ஆய்வு செய்து, விதிமுறைக்குட்பட்டு இருந்தால் விற்பனைக்கு அனுமதிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நெஸ்லே நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' மதிப்புக்குரிய மும்பை உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட3 ஆய்வகங்களில் 6 வகை சுவை கொண்ட 90 ரக மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியிருந்தோம். இதன் முடிவு அறிக்கை, தற்போது கிடைத்துள்ளது. அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயம் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் குறைவாகவே இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு சர்வதேச மற்றும் இந்திய விதிமுறைகளுக்குட்பட்டு 3,500 முறை பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட முடிவுகளும் கிடைத்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸ்கள் உண்பதற்கு ஏற்றவை என்று அறிக்கை வந்திருக்கிறது.
மேலும் இனிமேல் தரக்கட்டுப்பாட்டு கொள்கையில் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை. அதனால் இந்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு கழகத்துடன் கைகோர்த்துக் கொண்டு இனி செயல்படப் போகிறோம்'' என கூறியுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேகி நூடுல்சை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர நெஸ்லே நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment