ஆத்தூரில் சேகோ ஆலைகளில் ஆய்வு செய்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.அனுராதாவை, ஆலை உரிமையாளர்கள் வியாழக்கிழமை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி வால்கரடு பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.துரைசாமி. இவர் சேகோ ஆலை உரிமையாளர். இவர் ஆத்தூர் வட்டார சேகோ மற்றும் ஸ்டார்ச் உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இவரது ஆலை அருகே உள்ள செங்கோடன் சேகோ ஆலையை பூமாலை என்பவர் குத்தகைக்கு எடுத்து கடந்த ஒருவாரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
வியாழக்கிழமை மாலை அங்கு வந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.அனுராதா மற்றும் வருமான வரி அலுவலர்கள் ஆலையை ஆய்வு செய்து விட்டு, துரைசாமி ஆலையை ஆய்வு செய்தனர்.
அங்கு ஆய்வு செய்த அனுராதா, ஆலையில் உள்ள ஜவ்வரிசி மூட்டையைக் கணக்கிட்டுப் பார்த்து 1600 மூட்டை இருப்பதாக நோட்டீஸ் எழுதும் போது குறுக்கிட்ட துரைசாமி, 300 மூட்டைகள் தான் இருப்பதாகக் கூறியுள்ளார். எடை போட்டுப் பார்த்துக் கணக்கை எழுதுமாறும் தெரிவித்தாராம்.
இதனால், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கும், துரைசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், துரைசாமி ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, பொய்யான கணக்கை எழுதுவதாகவும், நேரில் வந்துப் பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பிற சேகோ ஆலை உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிய வரவே நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. ஆத்தூர் காவல் ஆய்வாளர் டி.கண்ணன் நேரில் வந்து பார்த்து ஆத்தூர் கோட்டாட்சியருக்குத் தகவல் கொடுத்தார். ஆத்தூர் கோட்டாட்சியர் சீ.ஜெயச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.மனோகர் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆலை சுகாதாரமாக இல்லை எனவும், இதனால் டெங்கு பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, நோட்டீஸ் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அதையும் துரைசாமி வாங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, ஆத்தூர் கோட்டாட்சியர் அனைவரிடமும் பேசி நாளை நடைபெறவுள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் கூட்டத்துக்குப் பிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம். இப்போது எந்தப் பிரச்னையும் வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புறப்பட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment