ஆத்துார் : ''ரசாயனம் கலந்த தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்ததால், ஜவ்வரிசி நுகர்வோர் எண்ணிக்கை குறைந்ததோடு, விலை வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழக இயற்கை முறை ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துலிங்கம் கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கடந்த, 1940 முதல், 2000 ஆண்டு வரை, ஜவ்வரிசியில், கலப்படம் இல்லை. மரவள்ளி கிழங்கு தோல் உரிக்காமல் அரவை செய்ததால், ஜவ்வரிசியை வெண்மையாக்க ரசாயன கலவை, மக்காச்சோள மாவு, சாக்பீஸ் மாவு கலந்ததால், ஜவ்வரிசி தரம் குறைந்து, இவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.2015-16ல், மரவள்ளி கிழங்கு அரவை பருவம் துவங்கிய நிலையில், மூன்று லட்சம் மூட்டை ஜவ்வரிசி விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. ரசாயனம் கலந்த தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்ததால், 15 ஆண்டுகளில் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. உற்பத்தியாகும் ஜவ்வரிசி விற்க முடியாமல் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மரவள்ளி கிழங்கு மாவில் இருந்து, இயற்கையான ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்காக, இச்சங்கம் துவங்கப்பட்டது. சில இடங்களில், தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்து வந்ததால், விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளர் சந்திரசேகர், ஜூலை மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மரவள்ளி கிழங்கு தோல் முற்றிலும் நீக்கி, ரசாயனம் கலப்பு இல்லாமல் இயற்கை முறையில், ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும்' என்றது. மேலும் கலப்படத்துக்கு வழி செய்யும் ஈர மாவு விற்பனையை முற்றிலும் தடை செய்து, செப்டம்பர், 7ம் தேதி, உத்தரவிட்டது.
இயற்கை முறை உற்பத்தியாளர்களால், மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்ததாகவும், சேலம் சேகோ சர்வ் முன், உண்ணா விரதம் இருப்பதாக, ஆத்துார் ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளது. மரவள்ளி அரவை துவங்க உள்ளதால், மரவள்ளி தோல் உரித்து, கலப்படம் இல்லாமல், இயற்கை முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்து, பல கோடி நுகர்வோர், விவசாயிகளை பாதுகாக்க, மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment