Sep 9, 2015

ஆத்தூரில் அனுமதி பெறாமல் விற்பனை செய்த 10,730 லிட்டர் ஆசிட் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

ஆத்தூர்: ஆத்தூரில், அனுமதி பெறாமல் "ஆசிட்' விற்பனை செய்த, மூன்று பேரிடம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 10,730 லிட்டர் ஆசிட் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் சோடியம் ஹைபோ குளோரைட் ஆகிய ஆசிட் விற்பனை செய்ய அனுமதி பெறாமல், சேகோ ஃபேக்டரிகளுக்கு விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் புஷ்பராஜ், கோவிந்தராஜ், முனுசாமி மற்றும் ஆத்தூர் ஸ்டேஷன் எஸ்.ஐ., பழனியம்மாள் ஆகியோர், ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது, ஆத்தூர் நகராட்சி, 31வது வார்டு, வ.உ.சி., நகர் பகுதியில், குட்டி (எ) செல்வராஜ், அழகுவேல் ஆகியோரின், ரைஸ் மில் வளாகத்தில், உரிமம் பெறாமல், "டேங்கர்' அமைத்து, ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம் ஹைபோ குளோரைட் ஆகிய "ஆசிட்' விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஒரு டேங்கரில் இருந்த, 550 லிட்டர் சோடியம் ஹைபோ குளோரைட் மற்றும் 180 லிட்டர் ஹைட்ரஜன் பெராக்சைடு என, மொத்தம், 730 லிட்டர் ஆசிட் பறிமுதல் செய்தனர். அடுத்து, உடையார்பாளையத்தை சேர்ந்த, "ஆசிட்' முருகேசன் என்பவரது, ரைஸ் மில் வளாகத்தில், உரிமம் பெறாமல், ஒரு டேங்கரில், 10,000 லிட்டர், சோடியம் ஹைபோ குளோரைட் ஆசிட் இருந்தது கண்டறிந்தனர். அதை உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, பறிமுதல் செய்து, ஆத்தூர் எஸ்.ஐ., பழனியம்மாளிடம் ஒப்படைத்தார். ஆசிட் விற்பனை செய்த, உடையார்பாளையம் "ஆசிட்' முருகேசன், வ.உ.சி., நகர் குட்டி (எ) செல்வராஜ், அழகுவேல் ஆகிய மூன்று பேர் மீது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீஸ் எஸ்.ஐ., பழனியம்மாள், விஷத்தன்மை கொண்ட ஆசிட் உணவு பொருள் தயாரிப்புக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: சேகோ, "ஸ்டார்ச்' உற்பத்திக்கு, நச்சுத் தன்மை கொண்ட சோடியம் ஹைபோ குளோரைட், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய ஆசிட் பயன்படுத்துதல், மக்காச்சோளம் மாவு கலப்படம் செய்யக் கூடாது என, 2014, மார்ச், 21ம் தேதி, அரசாணை வெளியிட்டது. ஜூன், 29ம் தேதி, ஆசிட் விற்பனையாளர் சங்கத்தினர் கூட்டம் நடத்தி, சேகோவுக்கு, ஆசிட் விற்பதில்லை என, தீர்மானம் போட்டு கொடுத்தனர். மீண்டும் ஆசிட் விற்றதால், சேலம், ஆத்தூரில், ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2014, ஜூன் முதல், ஆசிட் விற்பனை தடை செய்ததால், செப்டம்பர் 5ம் தேதி, ஒரு மூட்டை ஜவ்வரிசி, 7,355 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று (நேற்று), ஆத்தூரில், மூன்று பேரிடம், 10,000 லிட்டருக்கு மேல் ஆசிட் பறிமுதல் செய்து, போலீஸில் ஒப்படைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment