Jul 20, 2015

'தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை' என, தமிழக அரசு விளக்கம் அளித்தும், கேரளா மீண்டும் முரண்டு பிடிக்கிறது. காய்கறிகளின் பரிசோதனை அறிக்கையுடன் வரும்படி, டிரைவர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும், 2.28 கோடி டன் காய்கறிகளும், இரண்டு கோடி டன் பழங்களும் உற்பத்தியாகின்றன. திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உற்பத்தியாகும், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், தினமும், 200 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. 
நச்சுத்தன்மை:
தமிழகத்தில் இருந்து செல்லும் இந்தக் காய்கறிகளில், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அம்மாநில அரசு, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. அதற்கு, 'கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை' என, தமிழக அரசு விளக்கம் அளித்துஉள்ளது.
இதுகுறித்து, தமிழக தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதை, ஆய்வுகள் மூலம் உறுதி செய்ததாக கேரள அதிகாரிகள் கூறினர். ஆனால், ஆய்வு எங்கு நடந்தது, அதன் முடிவு என்ன என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி, தமிழகத்திற்கு, கேரள அரசு கடிதம் அனுப்பியது. உடன், தமிழக அரசு உத்தரவுப்படி, காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து, தோட்டக்கலைத்துறை 
மூலம் ஆய்வு நடந்தது.அதில், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை; அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பூச்சிக்கொல்லிகள் இருப்பது தெரியவந்தது. இதுபற்றிய விவரம், கேரள அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், இதைஏற்க மறுக்கும் கேரள அரசியல்வாதிகள், ஏதோ காரணத்தால், தொடர்ந்து பிரச்னை செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வகங்களில்... :
இந்நிலையில், 'தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றி வந்தால், அத்துடன், காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை என்பதற்கான,தமிழக ஆய்வகங்களில் பரிசோதனை செய்ததற்கான அறிக்கையையும் கொண்டு வர வேண்டும்' என, லாரி டிரைவர்களுக்கு, கேரள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
அதிர்ச்சி :
இதுதொடர்பாக, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்கள் கூறியதாவது: குமுளி, கம்பம்மெட்டு மற்றும் போடிமெட்டு சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள், 'இனி காய்கறிகளை கொண்டு வரும்போது ஆய்வக அறிக்கையுடன் வர வேண்டும். ஒரு வாரத்திற்குள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். ஆய்வக அறிக்கை இல்லாமல் வரும் காய்கறிகளை அனுமதிக்க மாட்டோம்' என, கூறுகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 
கேரள மாநில சோதனைச் சாவடிகளில், 'மொபைல்' ஆய்வகங்கள் அமைக்கப் போவதாக முன்னர் கூறிய கேரள அரசு, தற்போது, 'நீங்களே பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்' என, முன்னுக்குப்பின் முரணாக கூறியிருப்பது, காய்கறி வியாபாரிகளை அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது. கேரள அரசு, மீண்டும் முரண்டு பிடிக்கத் துவங்கியுள்ளதால், இதுபற்றிய விரிவான விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்ப, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

No comments:

Post a Comment