Jul 25, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு 7: நாட்டுக்கோழியின் இயற்கை சுவை



பிராய்லர் கறிக்கோழி காரணமாக உருவாகும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி முந்தைய வாரங்களில் பார்த்தோம். அப்படியானால், கறிக்கோழிக்கும் கோழி முட்டைக்கும் என்ன மாற்று?
நாட்டுக்கோழி
காலம்காலமாக நாம் சாப்பிட்டு வந்த நாட்டுக்கோழி இறைச்சியும், நாட்டுக்கோழி முட்டையும்தான் இதற்கு மாற்று என்கிறார்கள் இயற்கை வேளாண் ஆர்வலர்கள். நாட்டுக்கோழி இறைச்சி, நாட்டுக் கோழி முட்டையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
பொதுவாக மூக்கு வெட்டாத கோழி நாட்டுக்கோழி என்றும், அல்புமின் புரதம் அதிகமிருப்பதால் நாட்டுக்கோழி முட்டையின் சுவையில் புளிப்புத்தன்மை கூடுதலாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
என்ன தீர்வு?
நாட்டுக்கோழி முட்டை ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருவதால், அவற்றின் விலை பிராய்லர் முட்டைகளைப் போல மூன்று மடங்குவரை விற்கப்படுகிறது. அத்துடன் பிராய்லர் முட்டைகளை தேயிலைத் தண்ணீர் அல்லது சாயத்தில் முக்கி நாட்டுக்கோழி முட்டை என்று போலியாக விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த இரண்டுக்கும் என்ன தீர்வு?
தஞ்சாவூர் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் பேராசிரியருமான ந. புண்ணியமூர்த்தி சந்தேகங்களைக் களைகிறார்:
இயற்கை சத்து
நம் நாட்டில் உருவான நாட்டுக்கோழிகள் இயற்கையான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் முட்டைக்கும், கோழி இறைச்சிக்கும் அந்தச் சத்து கிடைக்கிறது. ஒரு நாட்டுக் கோழி ஓராண்டில் 80 முட்டைகள் வரை இடும். இயற்கையாக அதன் உடல் பெற்ற ஊட்டம், இந்த 80 முட்டைகளுக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது.
நாட்டுக்கோழி - கறிக்கோழி, நாட்டுக்கோழி முட்டை - பிராய்லர் கோழி முட்டை ஆகியவற்றுக்கான வேறுபாடுகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
தனி ருசி
ஆய்வுரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக்கோழி இறைச்சியும் நாட்டுக்கோழி முட்டையும் நிறம், மணம், குணம் ஆகிய அம்சங்களில் தனித்தன்மையுடன் காணப்படும்.
நாட்டுக்கோழி உயரம் குறைவாக இருக்கும். அதேநேரம் அது தரும் ருசியும் மணமும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.
பிராய்லர் கோழிகளின் எலும்பு அவ்வளவு வலுவாக இருக்காது, அதன் சதைப் பகுதியும் நீர்கோத்து மென்மையாக, சாப்பிட எளிதாக இருக்கும். நாட்டுக்கோழியின் இறைச்சி கடினமாக இருக்கும். கோழி இறைச்சியை நன்றாக மென்று தின்னால்தான் சிலருக்குத் திருப்தியாக இருக்கும். அதற்கு நாட்டுக்கோழிதான் ஏற்றது. நாட்டுக்கோழி இறைச்சியில் இயற்கையான குணமும் மணமும் கூடுதலாக இருப்பதன் காரணமாகவே, பலருக்கும் அது மட்டுமே பிடிக்கிறது.
அதேநேரம் நாட்டுக்கோழிகளையும் பிராய்லர் கோழிகளைப் போல இயற்கையாக இரை தேட விடாமல், பண்ணையில் அடைத்து நெருக்கடியாக வளர்த்தால், அதுவும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
அளவில் சிறியது
நாட்டுக்கோழி குட்டையாக இருப்பதைப் போலவே, அதன் முட்டையும் அளவில் சிறியதாக, பழுப்பு (பிரவுன்) நிறத்தில் இருக்கும். அதன் மஞ்சள் கரு, இயற்கையான நல்ல நிறத்துடன், திடமாக இருக்கும். இதன் மணமும் குணமும் பிராய்லர் முட்டையிலிருந்து மாறுபட்டிருக்கும்.
ஒருசிலர் தேயிலைத் தண்ணீரில் பிராய்லர் கோழி முட்டையை நனைத்து விற்பது வியாபாரத் தந்திரம்தான். நம்பிக்கையான ஒரு கடைக்காரருடன் நேரடிப் பழக்கம் வைத்துக்கொண்டு, முட்டையின் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமே நீண்டகாலத்தில் போலிகளைத் தவிர்க்க முடியும்.
இயற்கை முறை தடுப்பு
அதேநேரம் நாட்டுக்கோழி இறைச்சியோ, முட்டையையோ போலி செய்வதைத் தவிர்க்க, அதன் உற்பத்தி முறை செலவுகளைக் குறைத்துக்கொண்டு நுகர்வோருக்குக் கட்டுப்படியாகும் விலையில் உற்பத்தியாளர்கள் கொடுக்க ஆரம்பித்தால், இந்தப் போலிகளை முற்றிலும் தவிர்க்க வாய்ப்பு உண்டாகும்.
பிராய்லர் கோழிகளையும்கூட ஆன்ட்டிபயாட்டிக் மருந்து கொடுக்காமல் வளர்க்க முடியும். தடுப்பூசி தவிர, மூலிகைகள் மூலமாகவே நோய்களைச் சிறப்பாகத் தடுக்க முடியும் என்பதை எங்களுடைய ஆராய்ச்சி, வழிகாட்டுதலின் கீழ் பண்ணைகள் நிரூபித்துள்ளன.
பூனைக்கு மணி கட்டப்படுமா?
பிராய்லர் கோழியில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது தொடர்பாக, மத்திய அரசு பாராமுகமாகவே இருந்துவருகிறது. கால்நடை வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டை எந்த விதிமுறையும் கட்டுப்படுத்துவதில்லை, அவற்றின் விற்பனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
கால்நடைகளில் ஆன்ட்டிபயாட்டிக்குகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் அரசு சொல்கிறது. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) ஆன்ட்டிபயாட்டிக்குகளை வளர்ச்சி ஊக்கிகளாகப் பயன்படுத்தக் கூடாது என்கிறது. ஆனால், திட்டவட்டமான விதிமுறையாக அது அறிவிக்கப்படவில்லை. வெறும் அறிவுரை மட்டுமே.
தடுமாறும் அமெரிக்கா
கால்நடை உற்பத்தியில் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மையால் (Antibiotic resistance) பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 23,000 பேர் இறந்து போகின்றனர். ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மையை சமாளிப்பதற்கு அந்நாட்டில் ஆண்டுக்கு ரூ. 1,27,000 கோடி செலவாகிறது.
நம் நாடு பல்வேறு விஷயங்களில் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அமெரிக்காவிலும், கறிக்கோழி உற்பத்தியில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவில்லை. அதேநேரம் கறிக்கோழியினுடைய உடலின் பல்வேறு பாகங்களில் (சிறுநீரகம், ஈரல், தசை) எவ்வளவு ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கலாம் என்பதற்குத் தெளிவான கட்டுப்பாடு உள்ளது.
தேவை விதிமுறைகள்
ஐரோப்பிய யூனியனில் வளர்ச்சி ஊக்கிகளாக ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில ஆன்ட்டி பயாட்டிக்குகளைப் பயன்படுத்த முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கால்நடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் போன்ற விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இல்லையென்றால், அவற்றைவிட உறுதியான விதிமுறைகளைத் தேசிய அளவில் வகுப்பதற்கு நடவடிக்கை வேண்டும்.
செய்ய வேண்டியவை
அரசு உடனடியாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் என்று பாதுகாப்பான உணவை வலியுறுத்தும் ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்:
மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்புத் தொழிலில் பயன்படுத்தக் கூடாது.
கறிக்கோழித் தீவனத்தில் ஆன்ட்டிபயாட்டிக்கை கலக்கத் தடை விதிக்க வேண்டும்.
உரிமம் பெறாத, பெயர் குறிப்பிடப்படாமல் விற்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்.
கறிக்கோழி உற்பத்தியில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கண்டறியும் வகையில் தரக் கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்.
மனிதர்கள், கால்நடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு, ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை ஆகிய இரண்டைப் பற்றியும் கண்காணிக்கவும் கவனிக்கவும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment