எதைச் சாப்பிடுகிறோமோ, அது தான் நம் உடலும், நம் குணமும் என்பது நம் முன்னோர் புரிதல். ‘உணவே மருந்து' என்பதுதான் நம்முடைய மரபு.
ஆனால், இன்றைக்கு இயற்கையான உணவில் இருந்து, செயற்கையான ‘உணவு போன்ற' பொருட் களுக்கு மாறிவருகிறோம். அடிப்படையில் உணவுக்கும் நம் உடல்நலனுக்கும் உள்ள தொடர்பு சார்ந்த அறிவை, கிட்டத்தட்டத் தொலைத்துவிட்டதன் வெளிப்பாடு இது.
எது உணவு, எது செயற்கை உணவு என்ற புரிதல் இல்லாத நிலையில், சுவைக்கு அடிமையாகிக் கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறோம். இந்த அறியாமை நமது உடலை எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை இன்னமும்கூட நாம் உணரவில்லை.
நச்சுகள் பல வகை
எளிதாகக் கிடைப்பது, சுவையாக இருப்பது, பல்வேறு வடிவங்கள்-அலங்காரங்களில் கிடைப்பது போன்ற அம்சங்களால் குழந்தைகளை மட்டுமில்லாமல் பெரியவர்களையும் பதப்படுத்தப்பட்ட உணவு ஈர்க்கிறது. அதேநேரம் பூச்சிக்கொல்லி எச்சம், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள், வேதிப்பொருட்களில் தோய்த்து எடுக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நமது அலமாரிகளிலும் பயணங்களிலும் குடியேறி நாளாகிவிட்டது.
மேகி பிரச்சினை இன்றைக்குத் தலைதூக்குவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னரே பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளைப் புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment - CSE), தனது பரிசோதனைகள் மூலம் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.
மனிதத் திசுவில் பூச்சிக்கொல்லி
காய்கறிகளிலும், பழங்களிலும் பூச்சிக்கொல்லி இருக்கிறது, அதனால் நம் உடலுக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டிருப்போம். நாம் வாங்கும் காய்கறி, பழங்களில் அப்படிப்பட்ட பிரச்சினைகளை ஒரு சில முறையாவது எதிர்கொண்டிருப்போம். ஆனால், தாகம் எடுக்கும்போதெல்லாம் பலரும் குடிக்கும் புட்டி நீரிலும் குளிர்பானங்களிலும் பூச்சிக்கொல்லி இருக்கிறது என்றால், நம்ப முடியாதது போலத்தான் இருக்கும். ஆனால், இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் நமது உடலுக்குள் புகுந்த பூச்சிக்கொல்லி எச்சம், நமது திசுக்களிலும் இருப்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஆன்ட்டிபயாட்டிக் ஆபத்து
அதேபோல வைரஸ் காய்ச்சல் வந்தாலோ, வேறு வைரஸ் நோய்த்தொற்று வந்தாலோ நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை (ஆன்ட்டிபயாட்டிக்) மருத்துவர்கள் தருவது வழக்கம். மற்றொருபுறம் பிராய்லர் கோழிகள், தேன் போன்றவற்றிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சேர்க்கப்படுகின்றன.
நோய் தாக்குவதைத் தவிர்க்கப் பிராய்லர் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தும், அதற்கு எதிர்ப்புசக்தி கொண்ட பாக்டீரியாவும் அவற்றின் உடலில் பெருகுகின்றன. இவற்றைச் சாப்பிடும்போது, நம் உடலுக்குள் அவை கடத்தப்படுகின்றன.
ஆன்ட்டிபயாட்டிக்கும், எதிர்ப்புசக்தி கொண்ட பாக்டீரியாவும் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்வதன் காரணமாக, நாம் உண்மையிலேயே நோயால் அவதிப்படும்போது கொடுக்கப்படும், ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாமல் போகிறது.
சுடச்சுட, கவர்ச்சிகரமாக வரும் சக்கை உணவில் (Junk food) உப்பு, சர்க்கரை, டிரான்ஸ் ஃபேட் எனப்படும் தீங்கு செய்யும் கொழுப்பு போன்றவை மிக அதிகமாக உள்ளன. இவற்றை நீண்ட காலத்துக்கு உட்கொள்ளும்போது, உடலில் இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் நேரடியாகத் தெரிவதில்லை. இவற்றை உட்கொள்வதன் காரணமாக நீரிழிவு, உடல் பருமன், இதயக் கோளாறு போன்ற தொற்றாத நோய்கள் நாட்டில் மறைமுகமாகப் பரவலாகிவருகின்றன.
இவை எல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தான், இவை ஏற்படுத்தும் பாதிப்புகளின் பட்டியலுக்கு முடிவில்லை.
No comments:
Post a Comment