Apr 9, 2015

ஒமலூர் அருகே, வாகன தணிக்கையில் சிக்கிய ரூ.50 லட்சம் போதைப்பொருட்கள் தீ வைத்து அழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை


ஓமலூர்,ஏப்.9-
ஓமலூர் அருகே கடந்த ஆண்டு வாகன தணிக்கையில் பிடிபட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று தீவைத்து அழிக்கப்பட்டது.
போதைப்பொருட்கள் பறிமுதல்
ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி அதிகாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற ஒரு லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அந்த லாரியில் டீத்தூள் உள்ளதாகவும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கு எடுத்து செல்வதாகவும் டிரைவர் கூறி உள்ளார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததை கண்ட போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் போதைப்பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த லாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4½ டன் எடை கொண்ட 100 மூட்டை போதைப்பொருட்களை பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட நிக்கோடின் மற்றும் புகையிலை அந்த போதைப்பொருளில் கலந்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த போதைப்பொருட்கள் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனி அறை ஒன்றில் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த போதைப்பொருட்களை தீ வைத்து அழிக்க மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தலைமையில், காடையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புபழனி, சிங்காரவேலு, இளங்கோவன், தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அந்த போதைப்பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு தனவாய் பட்டி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த போதைப்பொருட்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டது.
எரிக்கப்பட்ட 100 மூட்டை போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். மூட்டை, மூட்டையாக போதைப்பொருட்கள் ஏரியில் கொட்டி அழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment