ஓமலூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவைத்து புதன்கிழமை அழித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் (ஹான்ஸ்) 100 மூட்டைகளில் இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு நான்கரை டன் அளவில் ரூ.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதை அறிந்த, தீவட்டிப்பட்டி போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா, சம்பவ இடத்திற்குச் சென்று, புகையிலைப் பொருள்களின் மாதிரியை எடுத்து, ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பினார். சோதனையில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய புகையிலைப் பொருள்கள் கொண்டு வரப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-இன்படி, அவற்றை அழித்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர் புதன்கிழமை தீவட்டிப்பட்டி அருகேயுள்ள தளவாய்ப்பட்டி ஏரிக்கு, புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்று தீவைத்து எரித்தனர்.
அப்போது, காடையாம்பட்டி செயல் அலுவலர் கலைராணி, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அன்பு பழனி, சிங்காரவேலு, இளங்கோவன், தீவட்டிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment