திருவள்ளூர், பிப்.9:
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகள், சுகாதாரமற்ற நிலையில் செயல்படுகின்றன. இதனால் நகர மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்கப்படுகின்றன. பெரும்பாலான கடைகளில், சுகாதாரம் சிறிதளவும் பின்பற்றப்படுவது இல்லை.
பல கடைகள் சாக்கடை கால்வாய் அருகே உள்ளன. இறைச்சி கழிவை, கடைக்கு மிக அருகில், குடியிருப்பு பகுதியில் கொட்டி அசுத்தப்படுத்துகின்றனர். ஈக்கள் மொய்க்கும் நிலையில், சாக்கடை கால்வாயில், இறைச்சி கழிவை கொட்டி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றனர்.
திருவள்ளூர் ஜெ.என்.சாலை, ஆவடி சாலை சந்திப்பு, எடப்பாளயம் ரோடு, சி.வி.நாயுடு சாலை உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக் கிழமைகளில் மீன், கோழி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி விற்பனை, திறந்தவெளியில் சாலையோரம் விற்கப்படுகின்றன.
அங்கு இறைச்சியை சுத்தப்படுத்தி, அக்கழிவுகளை அப்பகுதியிலேயே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சியை மூடி வைத்து விற்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, கொக்கியில் நாள் முழுவதும் மற்றவர் பார்வைக்காக தொங்க விடுகின்றனர்.
நோய்வாய்பட்டு இறந்த ஆடு, மாடு, கோழி, பன்றிகளை சிலர் குறைந்த விலைக்கு பெற்று விற்பனை செய்கின்றனர். அத்தகைய இறைச்சியை வாங்கி சாப்பிடுவோர், உடல் ரீதியாக பாதிப்படைகின்றனர்.
நகராட்சி சார்பில், எடப்பாளையம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செல வில் ஆட்டிறைச்சி வதைக்கூடம் அமைக்கப்பட்டும், அது முழுமையான பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஆடு வதைக்கூடத்தை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், சுகாதாரத்துறை தரப்பில் அனைத்து இறைச்சிக் கடைகளிலும், திடீர் சோதனை நடத்த வேண்டும்.
சுகாதாரமற்று செயல் படும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, மிக மோசமான நிலையில் செயல்படும் இறைச்சி கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்காமல் நகராட்சி அதிகாரிகள் தடை செய்ய வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment