பரங்கிமலை, பிப்.9:
பரங்கிமலை ஒன்றியத்தில் செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, முடிச்சூர், திருநீர்மலை, வேங்கைவாசல் உட்பட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் அதிகளவில் ஓட்டல்கள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள் உள்ளன. இதில், குறிப்பிட்ட சில ஓட்டல்களை தவிர, பிற ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
அதுமட்டுமின்றி, நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களை குறி வைத்து நடைபாதையில் தள்ளுவண்டி உணவகங்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன. 20 ரூபாய்க்கு சாம்பார், கூட்டு, பொரியலுடன் சாப்பாடு கிடைப்பதால் அதன் தரம் அறியாமல் பலர் வாங்கி சாப்பிடுகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை.
பல ஓட்டல்களில் தரமற்ற எண்ணெய், அழுக்கு படிந்த சமையற்கூடம், சுகாதாரம் இல்லாத குடிநீர், சுத்தம் செய்யாத பாத்திரங்கள், உணவு பொருட்களை சுத்தம் செய்யாமை உள்ளிட்ட பல்வேறு சுகாதார சீர்கேடுகள் உள்ளன. இந்த ஓட்டல்களில் விற்கப்படும் உணவுகளை தொடர்ந்து வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
மேலும், இந்த கடைகளில், திறந்த வெளியில், சிக்கன், மீன் மசாலா பொருட்கள் கலக்கப்படுவதால், இதிலிருந்து பறக்கும் துகள்கள், அவ்வழியாக உள்ள சாலைகளில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் பட்டு எரிச்சலை உண்டாக்குகிறது. அதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அவல நிலை உள்ளது.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதார ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு சட்ட அதிகாரிகள், பெயரளவுக்கு ஆய்வுகளை செய்து விட்டு, குறிப்பிட்ட தொகையை, மாமூலாக பெற்றுக் கொள்வதால், சுகாதாரமற்ற உணவு பொருட்களை மக்கள் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டு, பல்வேறு ஒவ்வாமை நோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படும் நிலை தொடர்கிறது
இதுகுறித்து, பொதுநல விரும்பிகள் சிலர் கூறுகையில், தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், சாலைகளின் ஒரு பகுதியை அடைத்து தள்ளுவண்டி உணவகங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும். தள்ளுவண்டி நிறுத்தப்படும் இடமும் சுகாதாரமற்று காணப்படுகிறது.
சில இடங்களில் உணவுக் கழிவுகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி தரமற்ற உணவகங்களுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment