Feb 12, 2015

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

  


சேலம், பிப்.12
சேலம் பெரியார் மேம்பாலத்தின்கீழே, செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் செல்லும் வழியில் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரியின் நுழைவுவாயில் பகுதி உள்ளது. இந்த நுழைவு வாயில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்படுவதாக கடந்த 11-ந் தேதி ‘தினத்தந்தி’யின் ‘நகர்வலம்’ பகுதியில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று காலை அரசு ஆஸ்பத்திரியின் உள்ளே அனுமதி பெற்று நடத்தி வரும் கடையிலும், வெளியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் அதிகாரிகள் பாலு, ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சாலையோர டிபன் கடை ஒன்றில் தோசை மாவு புளித்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை அகற்றினார். மேலும் 4 கிலோ எடையுள்ள அழுகிய கேரட் இருந்ததையும் கண்டறிந்து தூக்கி எறிந்தனர்.
மேலும் கடைகளில் பிளாஸ்டிக் கப், தட்டு, பைகள் இருப்பதை கண்டு உடனடியாக அகற்றினார். பிளாஸ்டிக் தட்டுகளில் பொதுமக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஒரு கடையில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது, தண்ணீரில் புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்து, சுகாதாரமான குடிநீரை பயன்படுத்தவும் டாக்டர் அனுராதா அறிவுரை கூறினார். அதைத்தொடர்ந்து அந்த தண்ணீர் ரோட்டில் கொட்டப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதையும் கண்டறிந்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment