சேலம், டிச.18:
ரசாயனம் கலந்த ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துலிங்கம் தலைமையில் 6 நிர்வாகிகள் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ரசாயனம் கலந்த ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மரவள்ளி கிழங்கை தோலுரித்து இயற்கையான முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வந்தனர். அதன் பிறகு மரவள்ளி கிழங்கை தோலுரிக்காமல் வெண்மை ஆக்குவதற்கு ரசாயன பொருட்கள் கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்து அனுப்பி வந்தனர்.
கடந்த ஆண்டில் மக்கா சோள மாவையும் கலந்து ஜவ்வரிசி உற்பத்தி நடந்து வந்ததால் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்தது.
இதனால் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் ஜவ்வரிசி, மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சியை தடுக்க முறையிட்டோம். உணவு பாதுகாப்பு துறையினரால் கொடுக்கப்பட்ட நெருக்கடியின் காரணமாக எந்த ரசாயன கலப்பும் இல்லாமல் கடந்த 6 மாதங்களாக ஜவ்வரிசி இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஜவ்வரிசி நுகர்வோரிடம் பெரும் வரவேற்பை பெற்று நல்ல விலை கிடைத் தது. தற்போது மீண்டும் வெண்மையான ஜவ்வரி உற்பத்தி செய்தால் மட்டுமே நல்ல விலை கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ரசாயனம் கலந்த ஜவ்வரிசியை உற்பத்தி செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சேலம் சேகோ சர்வ்வில் மிக கடுமையான தரக்கட்டுப்பாடு நடவடிக்கை எடுப்பதால் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசியை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதால் ஜவ்வரிசி விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனவே ரசாயனம் கலந்த ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். ரசாயன கலப்பட உற்பத்தி பொருட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உற்பத்தி பொருட்களும் சேகோசர்வ் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இயற்கையான ஜவ்வரிசி நுகர்வோர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு தமிழக முதல்வரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment