ஆத்தூர் : ஆத்தூர் அருகே, ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில், ஆர்.டி.ஓ., தலைமையிலான குழுவினர், அதிரடி சோதனை நடத்தினர்.
ஆத்தூர் அருகே, அம்மம்பாளையத்தில், ஆவின் நிறுவனத்தின், பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கிருந்து, பாக்கெட் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயார் செய்து, வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில், பால் குளிரூட்டும் நிலையத்தில், தனியாரிடம் கொள்முதல் செய்த பாலை, பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுடன் கலக்கின்றனர். அதனால், தாங்கள் வழங்கும் பாலின் தரம் குறைந்து விடுவதாக, பால் உற்பத்தியாளர்கள், மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் புகார் தெரிவித்தனர்.
அவரது உத்தரவுப்படி, நேற்று காலை, 11 மணியளவில், ஆத்தூர் ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், தாசில்தார் தேன்மொழி, ஆர்.ஐ., சுப்ரமணி, வி.ஏ.ஓ.,க்கள், திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, தனியாரிடம் கொள்முதல் செய்த, 9,120 லிட்டர் பாலை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேனில் எடுத்து வந்ததால், ஐந்து தனியார் மினி சரக்கு வேன்களை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், ஆவின் அலுவலர், விவசாயிகளிடம், விசாரணை நடத்தினார்.அப்போது, ஆவின் உதவி மேலாளர் கல்யாணராமன், ""உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, ஆர்.டி.ஓ.,விடம் கூறி, உத்தரவு நகலை காட்டினார்.அதையடுத்து, ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அங்கிருந்து வெளியேறினார். அதையடுத்து, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர், தனியார் பாலின் தரம் குறித்து, ஒவ்வொரு கேனிலும், ஆய்வு செய்து, மாதிரியை எடுத்தனர்.தனியார் பால் ஏற்றி வந்த, நான்கு வாகன உரிமையாளர் மற்றும் ஆவின் நிறுவனத்தில், அலுமினியம், சில்வர் கேன்களை தவிர்த்து, பிளாஸ்டிக் கேனில் பால் கொள்முதல் செய்தது, சுகாதார வசதிகள் இல்லாதது என, ஆவின் அலுவலருக்கும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, தனித் தனியாக, நோட்டீஸ் வழங்கினார்.மாதிரி எடுத்துள்ள பாலில், தரம் குறைவு கண்டறிந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment