ஈரோடு, டிச. 24: இறைச்சி கூடங்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என கால்நடைத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இறைச்சி கூடங்களில் கால்நடைகளை மனிதாபிமான மற்றும் சுகாதார முறையில் வதைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட பிராணிகள் துயர் தடுப்பு சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் தலைமை தாங்கி பேசியதாவது: அனைத்து இறைச்சி கூடங்களும் அதற்குட்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சியில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் கால்நடைகளை வதைக்க கூடாது. சினையாக உள்ள கால்நடைகள், மூன்று மாதத்திற்குட்பட்ட குட்டிகள், தொற்று நோய் தாக்கியவைகள், மெலிந்த கால்நடைகள் அல்லது விபத்தில் அடிபட்ட கால்நடைகளை வதைக்க கூடாது.
அனைத்து கால்நடைகளையும் கால்நடை மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை செய்து சான்று பெற்ற பின்னரே வதைக்க வேண்டும். மேலும் கால்நடை மருத்துவரிடம் இறைச்சியை காண்பித்து நோய் உள்ளதா என்பதற்கான சான்று பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இறைச்சி கூடங்கள் தூய்மையாகவும், போதுமான வெளிச்சம், காற்றோட்டம், மின் வசதிகளோடு இருக்க வேண்டும். ஈக்கள் மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கூடங்கள் நகர்புற எல்லையில் அமைந்திருக்க வேண்டும்.
மேலும் இறைச்சிகளை கழுவுவதற்கு சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும் பழைய மற்றும் அழுகிய இறைச்சிகளை விற்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment