பயணங்களின் போது கவுரவத்துக்காகவோ, தவிர்க்க இயலாமலோ பேக்கேஜுட் வாட்டரை பயன்படுத்த ஆரம்பித்த நாம், இன்று வாட்டர் கேன் வராவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். 20 லிட்டர் தண்ணீர் கேன் 40 ரூபாய் என்று விற்கப் படும் அளவுக்கு, ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் மிகப்பெரிய வர்த்தகமாக இது உருவாகியிருக்கிறது.
அத்தியாவசியப் பொருளான தண்ணீர், விலைப் பொருளாக மாறிய கொடுமை ஒருபக்கம் இருக்கட்டும்... ‘சுகாதாரமானது’ என்று நாம் நம்பி வாங்கும் இந்த வாட்டர்உண்மையிலேயேபாதுகாப்பானதுதானா என்ற சந்தேகமும் மறுபுறம் விவாதத்துக் குரியதாகவே இருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துவரும் பேராசிரியர்ரஹ்மானிடம் இதுபற்றிப் பேசினோம்...
‘‘இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை கவர்ச்சியான ஒரு பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மோசடிதான் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார்.
‘‘இந்தக் குற்றச்சாட்டை நான் மேலோட்ட மாக சொல்லவில்லை. பேக்கேஜுட் டிரிங்கிங் வாட்டர் எப்படி தயாராகிறது என்று தெரிந்தால் நான் சொல்வதன் அர்த்தம் புரிந்துவிடும். இந்த நிறுவனங்கள் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஏதேனும் ஒரு நீர் ஆதாரத்திலிருந்து மொத்தமாக எடுக்கிறார்கள்.
இந்தத் தண்ணீரில் படிந்திருக்கும் நுண்துகள்கள், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை அகற்ற வேண்டும் என்பதற்காக, சில வேதிப்பொருட்களைக் கலந்து சுத்திகரிக்கிறார்கள். தண்ணீரின் அமிலத்தன்மை, காரத்தன்மையை நீக்க வேண்டும் என்பதற்காகவும் சுத்திகரிக்கிறார்கள். இந்தத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கண்ணாடி போல சுத்தமாகத் தெரியும். இப்போது மேலே சுத்தமாக இருக்கும் தண்ணீரை மட்டும் பாட்டில் / கேன் வாட்டர் தயாரிக்க எடுத்துக் கொள்கிறார்கள்.
சுத்திகரிப்பின் போது மாசுகள் அகற்றப்படுவது நல்ல விஷயமாக இருந்தாலும், தண்ணீரில் இயற்கையாகவே இருக்கும் சில உப்புச்சத்துகளும் சேர்ந்து இதனுடன் வடிகட்டப்பட்டுவிடுவதால் வெறும் தண்ணீராகவே நமக்குக் கிடைக்கிறது. இதனால், தண்ணீர் மூலம் நமக்குக் கிடைக்கும் கால்சியம், பொட்டாசி யம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன.
மூன்று புறமும் தண்ணீர் இருக்கிற இந்த பூமியில் தண்ணீர் பஞ்சம் இருப்பது எத்தனை வினோதமானதோ, அதேபோல மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் தண்ணீரில் மினரல்களே இல்லை என்பதும் ஒரு வினோதமான உண்மை. இருக்கிற தாதுச்சத்துகளையும் வடிகட்டி விட்டுக் கொடுப்பதற்கு பெயர் மினரல் வாட்டரா?
பெரிய நிறுவனங்கள் சுத்திகரிக்கும் வாட்டரில் தாது உப்புகள் இல்லை என்றால், சரியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் நச்சுத்தன்மை மிக்க கனிமங்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை அதிகமாக இருக்கின்றன. இந்த சுகாதாரமற்ற தண்ணீரால் சரும நோய்கள், கால்சியம் சத்துப் பற்றாக்குறையால் எலும்புகள் பலவீன மாவது என்று பல சிக்கல்களும் கூடவே வருகின்றன.
இந்தியர்களுக்கு எப்போதுமே மேற்கத்திய விஷயங்கள் மீது ஈடுபாடு அதிகம். அவர்கள் என்ன செய்தாலும், அதை அப்படியே பின்பற்றுவதுதான் நம் பழக்கம். அதே வழியில்தான் வெளிநாட்டினர் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்துகிற Reverse Osmosis என்கிற ‘எதிர்ச்சவ்வூடுப் பரவல்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலை வேறு, அவர்கள் அருந்தும் தண்ணீரின் அளவு வேறு, வெளியேறும் சிறுநீரின் அளவு வேறு, உடலமைப்பு வேறு போன்ற அடிப்படையான விஷயங்களை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம்.
உண்மையில், தெருக்குழாய்களின் மூலமும் நகராட்சிகளின் மூலமும் அரசாங்கம் கொடுக்கும் குடிநீரே போதுமானதுதான். இந்தத் தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சிக் குடித்தால், அதைவிட பாதுகாப்பானது எதுவும் இல்லை. தண்ணீரில் இருக்கும் தாது உப்புகளும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரையோ, குளோரின் மூலம் சுத்திகரித்து அரசாங்கம் கொடுக்கும் தண்ணீரை யோ நாம் நம்புவது இல்லை’’ என்கிறார் வருத்தத்துடன்!
உண்மையில், தெருக்குழாய்களின் மூலமும் நகராட்சிகளின் மூலமும் அரசாங்கம் கொடுக்கும் குடிநீரே போதுமானதுதான். இந்தத் தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சிக் குடித்தால், அதைவிட பாதுகாப்பானது எதுவும் இல்லை!
மருத்துவர் அர்ச்சனாவிடம் மினரல் வாட்டரால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அதற்கான மாற்று வழிமுறைகளையும் கேட்டோம்...‘‘இந்தியாவைப் பொறுத்த வரை போதுமான கழிவறை வசதிகள் இல்லாதது, சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் அலட்சியம் போன்ற சில காரணங்களால் தண்ணீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்த சூழலில்தான் சுத்தமான, சுகாதாரமான தண்ணீர் என்ற வாசகங்களுடன் வரும் மினரல் வாட்டர் நம்மைக் கவர்ந்துவிடுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, சாதாரணமாக நமக்குக் கிடைக்கும் தண்ணீரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடித்தாலே போதுமானது. தண்ணீரைக் கொதிக்க வைப்பதோடு அந்த தண்ணீரை சரியாக மூடி வைக்க வேண்டும், தண்ணீரைக் கையாள்பவர்களின் தனிநபர் சுத்தம், பயன்படுத்தும் டம்ளரின் சுத்தம் என்று மற்ற விஷயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த விரும்பினால் அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் ப்யூரிஃபையரை சுத்தம் செய்வதும் அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டரை தவிர்க்க முடியாது. அதனால், மினரல் வாட்டரால் நமக்குக் கிடைக்காமல் போகும் சத்துகளை சமன்படுத்த காய்கறிகள், பழங்கள், நல்ல சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரால் மட்டுமே நமக்கு எல்லா சத்துகளும் கிடைத்துவிடுவதில்லை என்பதையும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. சுகாதாரமற்ற மினரல் வாட்டரால் மட்டும் அல்ல, பொதுவாகவே சுகாதாரமற்ற தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்கள் வருகின்றன என்பதால் தண்ணீர் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்!’’
கேன் வாட்டரை தவிர்க்க முடியாதவர்களுக்கு நாலு விஷயங்கள்!
*கேன் வாட்டர் தயாரிப்பாளர்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்களை விட, குடிசைத் தொழில் போல் அங்கீகாரம் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள்தான் அதிகம். அதனால், நீங்கள் யாரிடம் தண்ணீர் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
*நுண்கிருமிகள் நீக்கப்பட்ட (Sterilize) கேன்களில்தான் தண்ணீர் நிரப்பி விற்க வேண்டும். பல இடங்களில் அழுக்கடைந்த கேன்களிலேயே தண்ணீர் நிரப்பி மீண்டும் வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிடுகிறார்கள். தண்ணீர் நிரப்பும் கேன் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
*சீல் உடைக்கப்பட்ட வாட்டர் பாட்டில், கேன் ஆகியவற்றை எவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நல்லது. அதிக நாட்கள் திறந்து வைத்திருக்கும் போது அந்தத் தண்ணீரில் நுண்கிருமிகள் தானாகவே வந்துவிடும் வாய்ப்பு உண்டு.
*வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தால், முடிந்த வரை வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துச் சென்று பழகுங்கள்.
அவசியமா ஆர்.ஓ.?
ஆர்.ஓ. என்பதன் பொருள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ். ஆர்.ஓ. ட்ரீட்டட் செய்யப்பட்ட தண்ணீரில் உப்புச் சுவை இருக்காது. இந்த முறையில் தண்ணீரில் இருந்து உப்பு பிரிக்கப்பட்ட பிறகு கிடைக்கிற ரிஜக்டட் தண்ணீரையே நாம் உபயோகிக்கிறோம். தண்ணீரில் டிடிஎஸ் எனப்படுகிற டோட்டல் டிசால்வ்டு சாலிட்ஸ் அளவானது 2,100 மில்லிகிராம் - ஒரு லிட்டருக்கு இருக்க வேண்டும் என்பது மாசுகட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடுகிற அளவு. சில தண்ணீரில் இது கூடவோ குறைவாகவோ இருக்கும்.
ஆர்.ஓ. ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீரிலோ உப்புச் சத்து அறவே இருக்காது. நம் உடலில் உள்ள உப்பானது வியர்வை மற்றும் சிறுநீரின் வழியே வெளியேறும். அதை ஈடுகட்ட சாதாரண தண்ணீரை குடிக்க வேண்டும். ஆர்.ஓ. ட்ரீட்டட் செய்யப்பட்ட தண்ணீரையே குடிப்பதால் இந்த உப்பு இழப்பு ஈடுகட்டப்படாது. உடலுக்கு தேவையான உப்புச் சத்து இல்லாவிட்டால் களைப்பாக உணர்வோம். சாதாரண தண்ணீரில் ஓரளவு கால்சியம் சத்தும் இருக்கிறது.
ஆர்.ஓ ட்ரீட்டட் தண்ணீரில் இந்த கால்சியமும் நீக்கப்படும். வயதானவர்களும் பெண்களும் தொடர்ந்து ஆர்.ஓ. ட்ரீட்டட் தண்ணீரை குடிப்பதால் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகிறார்கள். அவர்களது எலும்பு ஸ்பாஞ்ச் போல மிருதுவாகும். லேசாக அடிபட்டால் கூட எலும்புகள் நொறுங்கிப் போகலாம்.
ஒருசில மினரல் வாட்டரை பருகும் போது லேசான இனிப்புச் சுவையுடன் இளநீர் போல இருப்பதை உணரலாம். அவர்கள் அதில் சேர்க்கிற ஒருவிதமான கெமிக்கலே அதற்கு காரணம். கொதிக்க வைத்து வடி கட்டிய தண்ணீரே ஆரோக்கியமானது. ஆர்.ஓ. ட்ரீட்டட் தண்ணீர் அனாவசியமானது.
No comments:
Post a Comment