Oct 30, 2014

சுகாதாரமற்றதாக புகார் அரசு மருத்துவமனையில் உணவகத்துக்கு அதிரடி சீல்


சென்னை, அக். 30:
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்துக்கு சீல்வைக்கப்பட்டது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஐந்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், டீ கடைகள் உள்ளன. இதுதவிர அம்மா உணவகமும் உள்ளது. இங்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும் உணவகங்களுக்கு சென்று சாப்பிடுகின்றனர்.
இதேபோல் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்காக தனியாக உணவகம் உள்ளது. தனியாரால் நடத்தப்படும் இந்த உணவகம் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், புகார் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து உணவகம் நடத்தும் தனியாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், மீண்டும் மீண்டும் புகார் வந்தவண்ணம் இருந்ததால் நேற்று மீண்டும் சோதனையிட்டனர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அதிகாரிகள் உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் மேல் எச்சரிக்கை நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதேபோல் மருத்துவமனையில் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment