ஓமலூர்,அக்.17-ஓமலூர் அருகே வெல்லம் தயாரிப்பில் ரசாயன கலப்படம் செய்த 3 கரும்பு ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரசாயன கலப்படம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் சர்க்கரை செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. அந்த பகுதியில் உள்ள சில கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிப்பில் அதிக அளவில் ரசாயன பொருட்களை கலப்படம் செய்வதாகவும், தரம் குறைந்த பொருட்களை வெல்லம் தயாரிக்க பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில், சிங்காரவேலு, அன்புமணி, இளங்கோவன், மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஓமலூர் பகுதியில் உள்ள கரும்பாலைகளில் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது கோபிநாதபுரத்தை சேர்ந்த இடும்பன், காமலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோரின் கரும்பு ஆலைகளில் இருந்து 1¼ மூட்டை ரசாயன பொருட்கள் மற்றும் 10 ½ மூட்டை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
3 கரும்பு ஆலைகளுக்கு சீல்
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கரும்பு ஆலைகளில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்ட நிலையில், ரசாயன பொருட்களை கலப்படம் செய்த 3 கரும்பு ஆலைகளில் வெல்லம் உற்பத்தி செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர். சம்பந்தப்பட்ட 3 ஆலைகளும் சீல் வைக்கப்பட்டன.
வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தில் ஈடுபடும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். தீபாவளி நெருங்கும் நிலையில் வெல்லம் தயாரிப்பில் ரசாயன பொருட்கள் கலப்படம் தொடர்பாக 3 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment