சென்னை: நுகர்வோருக்கு உணவுப் பொருட்கள் தரமானதாக கிடைக்க வழி வகை செய்யும் வகையில், 'உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் - 2006'ஐ, மத்திய அரசு கொண்டு வந்தது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2011ல், அமலுக்கு வந்தது.
இதன்படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் செய்வோர், 100 ரூபாய் செலுத்தி, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், 2,000 ரூபாய் செலுத்தி, உரிமம் பெற வேண்டும். சான்று, உரிமம் பெறாவிட்டால், 15 லட்சம் ரூபாய் வரை அபராதம், சிறைத் தண்டனை தரும் வகையில், சட்டம் உள்ளது. 'காலத்திற்கேற்ப சட்டத்தை திருத்த வேண்டும்; அதுவரை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது' என, நாடு முழுவதும் வணிகர்கள் எதிர்த்தனர். இதனால், அடுத்தடுத்து மூன்று முறை, மத்திய அரசு அவகாசம் அளித்தது. கடைசியாக அளித்த, ஆறு மாத அவகாசம், நேற்றுடன் முடிந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், 'உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்' என, வணிகர் அமைப்புகள், பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்தின. ஆனால், மத்திய அரசு மவுனம் சாதித்து வந்ததால், வணிகர்கள் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.
இந்த நிலையில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, வணிகர்கள் உரிமம் பெறுவதற்கான அவகாசம், மேலும், பிப்., 2, 2015 முடிய, ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உணவு பாதுகாப்புத் துறை இயக்ககம், நேற்று வெளியிட்டது. வணிகர்கள் நிம்மதி: மத்திய அரசின் இந்த கால நீட்டிப்பை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட, வணிகர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. 'நீட்டிப்பு காலத்திற்குள், உணவு பாதுகாப்பு சட்டத்தில், காலத்திற்கேற்ப திருத்தங்களை செய்ய, அரசு முன்வர வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment