Jun 9, 2014

கேன் வாட்டர் விற்பனை அதிகரிப்பு - போலிகளை கண்டுபிடிக்க சோதனை - பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 9:
தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது. இதனால் குடிப்பதற்கு தண்ணீரின்றி பொது மக்கள் காலி குடங்களுடன் போராட்டங்களில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக அரசு பொது மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய லாரிகள், குழாய்கள் மூலம் வினியோகித்து வருகிறது. அந்த தண்ணீர் சுத்தமாக இருப்பதில்லை என்பதால் பொது மக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் நிலத்தில் இருந்து எடுக்கும் தண்ணீரை சுத்திகரித்து 25 லிட்டர் கேன்களில் அடைத்து 10க்கு விற்பனையாளர்களுக்கு விற்கின்றனர். விற்பனையாளர்கள் 30க்கு வாடிக்கையாளர்க ளுக்கு விற்கின்றனர். இவ்வாறு விற்கப்படும் தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
தண்ணீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதற்கு உணவு பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம், ஐஎஸ்ஐ அமைப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டும். மேலும் மைக்ரோ பயோலாஜிக்கல் டெஸ்ட், கெமிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
வெயில் காலம் என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், ஆய்வுகளை யும் நடத்தாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எந்தவித சுத்திகரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் முன்னணி தண்ணீர் நிறுவனங்களின் சாய லோடு கொண்ட பெயரில் லேபிலை ஒட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற நிறுவனங்கள் நிலத்தடி நீரை அசுர வேகத்தில் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. சுகாதரமற்ற நீரில் 100க்கும் மேற்பட்ட கிருமிகள் இருக்கும். இதனால் மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய்கள் மக்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 310 தண்ணீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று மாவட்டங்களிலும் தினமும் 6,20,000 கேன்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 1 கோடியே 55 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீரின் பாதுகாப்பை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பவுல் கூறுகையில், பொது மக்களில் 60 சதவீதத்தினர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் தண்ணீரையே குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் முறையான அனுமதி பெறாமல் போலியாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டிரைக் கில் ஈடுபட்டபோது மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே மக்களின் தேவையை உணர்ந்து பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.


கிரேட்டர் சென்னை, குடிநீர் தயாரிப்பு அசோசியேஷன் பொது செயலாளர் கோபிநாத் கூறுகையில், கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் விற்பனை அதிகரித்தாலும் மின் வெட்டினால் அந்த லாபத்தை பெற முடியவில்லை. லாப தொகை ஜெனரேட்டர்களுக்கு டீசல் வாங்குவதற்கே செலவாகிவிடுகிறது. ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தண்ணீரையே மக்கள் வாங்க வேண்டும். போலி நிறுவனங்கள் செயல்படுவதாக எங்களுக்கு பொது மக்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிகை எடுப்போம் என்றார்.

1 comment:

  1. தண்ணீர் தட்டுபாட்டினை தவிர்க்க வியாபார ரீதியாக செயல்படும் தண்ணீர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் வழங்கி உள்ளதா ? தரமானதா என சோதிப்பது யார் ?

    ReplyDelete