சிவகங்கை, ஜூன் 9:
சிவ கங்கை நகர் பகுதியில் பான் மசாலா, குட்கா விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவற்றை விற்பனை செய்ய அரசு தமிழக தடை விதித்துள்ளது. இதனால் இப்பொருட்களை கடைக்காரர்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய தொடங்கினர். மறைத்து விற்கப்படும் தகவல் அறிந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடைகளில் சோதனை நடத்தி பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர்ந்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். ஆனால் சிவகங்கையில் இப்பொருட்கள் எவ்வித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநிலத்தவர் தங்கி கட்டிட வேலைகள் செய்து வருகின்றனர்.
சிவகங்கையை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரியில் படிக்கும் வெளி மாநிலத்தவர் மற்றும் மாணவர்களை குறிவைத்தே இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளுக்கு முன்பு பான் மசாலா, புகையிலை நிறுவனத்தின் பெயருடன் வந்து பொருட் களை இறக்கி செல்லும் வேன்கள் தற்போது பெயரில்லாத வேன்களில் வந்து மொத்தமாக இறக்கி செல்கின்றனர்.
இது குறித்து சிவகங்கையை சேர்ந்த கண்ணன் கூறுகையில், இளைஞர்களே இப்பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசு தடை விதித்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். சிவகங்கையில் முன்பு நியாயமான விலையில் விற்ற இப்பொருட்கள் அரசு தடையால் தற்போது பல மடங்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. எப்படியாவது பொருட்கள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் எந்த விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர். கூடுதல் விலை கொடுத்து நோயை வாங்கும் நிலை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment