Jun 30, 2014

மலிவு விலை உணவகங்களில் உணவும் மலிவுதான்


பழநி, ஜூன் 29:
பழநியில் அதிகரித்துள்ள மலிவு விலை உணவகங்களின் தரத்தை கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தின மும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர, சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சொந்த பணிகளுக்காக பழநி வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் தங்களது வேலை முடிவடையும்வரை பழநி நகரில் சுற்றித்திரிய வேண்டி உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களே ஆவர்.
பழநி நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் ஒரு சாப்பாடு ரூ.60க்கு குறைவாக விற்பனை செய்யப்படு வதில்லை. அதுபோல் கலவை சாதங்களும் ரூ.30க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாகவே இருந்து வருகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக எனக்கூறி பழநி நகரின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் ஏராளமான மலிவு விலை உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல் ஆம்னி வேன் போன்ற வாகனங்களின் மூலமும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் அடி வாரம், தாலுகா அலுவலகம், வங்கிகள் மற்றும் நீதிமன்ற வளாகங்களின் முன்பு மலிவு விலை உணவு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதுபோல் ரயிலடி சாலை, ராஜேந்திர சாலைகளில் ஏராளமான டீக்கடைகளில் தற்போது உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின் றன. இங்கு ஓட்டல்களில் உள்ள உணவுகளின் விலையை விட பாதி அளவே வசூலிக்கப்படுகிறது. இதனால் இந்த மலிவு விலை உணவுகங்களில் எப்போதும் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
ஆனால், விலை மலிவு என்பது போல், சுகாதாரமும் மலிவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. உணவு தயாரிக்க தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோன்ற மலிவு விலை உணவுகளை உட்கொள்ளும் பலர் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.
ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், ‘கடந்த இரு தினங்களுக்கு முன் வாகனத்தில் விற்கப்பட்ட மலிவு விலை உணவகத்தில் சாப்பிட்டேன். முறையாக தயாரிக்காததால் கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்’ என்றார்.
இதுகுறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கத்திடம் கேட்டபோது, ‘உணவகங்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாக இருக்க வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சோதனை மேற்கொள்ளப்படும். சுகாதாரமில்லாதது கண்டுபிடிக்கப்பட்டால் அபாராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment